நாட்டில் தற்போது சிலர் சித்தரிக்க முயல்வது போன்ற எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை என்று தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடானது ஒரு வெளிப்புறக் காரணியினால் ஏற்பட்டதாகும். இதனை அரசாங்கம் மிகவும் வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்து வருகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்நாட்டு ரீதியான நிதி நெருக்கடி ஒன்று காணப்படுமாயின், அரசாங்கத்தின் வருமானம் குறைந்திருக்க வேண்டும் அல்லது திறைசேரியில் செலவுகளுக்குப் பணம் இல்லாது போயிருக்க வேண்டும். ஆனால், தற்போது அத்தகைய நிலைமை இல்லை.
தற்போதைய அரசாங்கம் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைத்துள்ளது. எனவே, நாட்டின் பொருளாதார உறுதித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது என்று அனில் ஜயந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடியானது தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள், மோசடி மற்றும் ஊழல்களினால் ஏற்பட்டதாகும்.
ஆனால், தற்போதைய நிலைமை ஒரு வெளிப்புற விநியோகச் சங்கிலி நெருக்கடியாகும். இவ்விரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியாது என்று தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.



