தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு நாட்டின் அரசியல் போக்கை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அதற்கு லண்டனில் வாழும் இலங்கையர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க லண்டனில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, “நமது நாட்டு மக்கள் ஆட்சியை அமைக்க, ஆட்சியை மாற்ற, தலைவர்களை மாற்றி ஆட்சியை கவிழ்க்க என அரசியல் பிரதிபலிப்புக்களை காட்டி வருகின்றனர். அரசியல் குறித்தும் அவர்கள் பேசுவதுண்டு. ஆனால், ஓரிரு வருடங்கள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது ஏமாற்றமும் வேதனையும் மாத்திரமே எஞ்சியிருக்கும்” என்று தெரிவித்ததுடன், “நீங்கள் எங்களை ஆதரித்தால், எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தால், எங்களுக்காகப் பேசினால் உங்கள் கௌரவத்தை காத்திட நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என்றும் உறுதியளித்தாா்.
“நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் பணிபுரிந்துள்ளோம். இங்கு வருகை தந்துள்ள நீங்கள் மாற்றத்தை நம்பியிருக்கின்றீர்கள். இந்த நாட்டில் வாழ்வதன் மூலம், நீங்கள் நமது இலங்கை நாடானது எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அத்தகைய மாற்றத்தை எதிர்பார்க்கின்றீர்கள். மறுபுறம், தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்கள், சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்க்கையில் அடைந்துள்ள அனுபவங்களின் அடிப்படையில் உங்கள் புரிதலை நீங்கள் விரிவுபடுத்தியிருக்கலாம். அதனடிப்படையில் உங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் நீங்கள் நினைக்கலாம்” என்றும் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.



