நாடு கடத்தப்பட்ட தமிழர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு இலங்கை குடிவரவு துறை உத்தரவு

ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் இன்று கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இரகசிய இடங்களில் நாடுகடத்தப்படுவதற்காக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மனித உரிமை அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என வலியுறுத்திவந்தன. ஜேர்மனியிலும் இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

ஆனாலும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்களை நாடு கடத்த முழு நடவடிக்கையையும் ஜேர்மன் அரசு முன்னெடுத்திருந்தது. அதே போல் சுவிட்சர்லாந்திலிருந்தும்  சிலர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கொழும்புக்கு வந்தடைந்த நாடுகடத்தப் பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அழைத்துச்செல்லுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் முடிவடைந்ததும் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் அதன் பின்னர் அவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.