நாடு ஆபத்தான நிலையை நோக்கி நகர்வதாக GMOA எச்சரிக்கை

புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட ‘புத்தாண்டுக் கொத்தணியில்’ இருந்து இதுவரையில் சுமார் 97 ஆயிரம் கோவிட் – 19 தொற்றாளர்கள் இனங்காணப் பட்டிருக்கிறார்கள். அதேபோன்று இதுவரையில் நிகழ்ந்த 1,608 கொரோனா மரணங்களில் சுமார் 974 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் அடையாளங்காணப் பட்டவர்களாவர். எனவே மொத்த கொரோனா மரணங்களில் 60 சதவீதமானவை புத்தாண்டுக் கொத்தணியின் போது இனங்காணப்பட்ட நோயாளர்களை உள்ளடக்கியதாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

“நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதென்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இதில் புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட ‘புத்தாண்டுக் கொத்தணியில்’, அதாவது கோவிட் – 19 வைரஸ் பரவலின் மூன்றாவது அலையில் சுமார் 96 ஆயிரம் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப் பட்டிருக்கிறார்கள்.

அதேபோன்று இதுவரையில் நிகழ்ந்த 1,608 மரணங்களில் சுமார் 974 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் இனங்காணப் பட்டவர்களாவர். ஆகவே ஏப்ரல் 18 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரையான மிகக்குறுகிய காலத்தில் 60 சதவீதமான கோவிட் – 19 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

எனவே நாடு மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் நிலைத்த தன்மையொன்று பேணப்படவில்லை. ஏனெனில் பி.சி.ஆர் பரிசோதனைகள் குறைவான எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் அதிகளவான நோயாளர்கள் அடையாளங்காணப் படுகின்றார்கள்.

எனவே பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாகவே உண்மையான நோயாளர்களின் எண்ணிக்கையை அறியமுடியும். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் தற்போது இனங்காணப்படும் நோயாளர்களை விடவும் மூன்று அல்லது நான்கு மடங்கான நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள்.

மேலும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கான செயற் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஏற்கனவே அறியத்தந்திருக்கிறோம்.

இந்நிலையில் இக்குறைபாடுகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதற்கான வழிகாட்டியொன்றைத் தயாரித்து நேற்று முன்தினம் ஜனாதிபதியிடமும் சுகாதார அமைச்சரிடமும் சுகாதார அமைச்சின் ஏனைய அதிகாரிகளிடமும் கையளித்திருக்கிறோம்.

தொற்றின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு எமது நாட்டின் சனத்தொகையில் 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். ஆகவே அனைத்துக் காரணிகளையும் கருத்திற்கொண்டு எந்தெந்தத் தரப்பினருக்கு தடுப்பூசிகளை முதலில் வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் குறித்த வழிகாட்டியைத் தயாரித்திருக்கின்றோம்” என்றார்.