நாளை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதென்று யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்றைய தினம் அடையாள வகுப்புப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி தமது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து பல்கலைக்கழகம் பற்றிய பல கருத்துக்கள் ஊடகங்களிலும்,சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.
இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (27) காலை விசேட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பதவி விலகிய கலைப் பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்”‘பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலினை மீளப் பெற்று மீண்டும் பீடாதிபதிப் பொறுப்பினை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலினைப் பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ‘மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக மீளப் பெறப்படல் வேண்டும்’ என்றும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம் ‘மோசமான செயல்களிலே ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும், அவற்றினைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால தாமதங்களை ஏற்படுத்தல் மற்றும் வேண்டுமென்றே நிர்வாகத் தவறுகளை இழைத்தல் போன்ற செயன்முறைகள் மூலம் மீறல்களிலே ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு நிர்வாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு போன்றன உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படல் வேண்டும்’ என்றும் அந்த சங்கத்தினர் கோரியுள்ளனர்.
‘கலைப் பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்’.
‘இது தொடர்பிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது’ என்று அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் மீளவும் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.



