தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலிடம் இரண்டு மணி நேர வாக்குமூலம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலிடம் இரண்டு மணி நேர வாக்குமூலம் பெற்றுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸார் இவ்வாறு வாக்குமூலம் பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் இருந்து வந்த தனது மகளை இரண்டு வார காலத் தனிமைப்படுத்தலின் பின்னர், கொரோனா தொற்று அபாயம் இல்லை எனச் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஒப்பமிட்டு வழங்கியச் சான்றிதழுடன் அழைத்து வந்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலிடம் அது தொடர்பிலேயே யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று இரண்டு மணிநேரம் வாக்கு மூலம் பெற்றனர். இன்றும் அது தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது;

தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் மூவரில் ஒருவரான இரட்ணஜீவன். எச் ஹூலின் மகள் இலண்டனில் கல்வி கற்று வந்தார். ஏனைய மாணவர்களுடன் கடந்ந மே மாதம் 03 ஆம் திகதி அவர் விமானம் மூலம் நாடு திரும்பியிருந்தார். நாடு திரும்புவதற்கு ஒரு வழிக்கட்டணமாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபா செலுத்தியே விமானச் சிட்டுப் பெறப்பட்டது.

நாடு திரும்பிய அவரின் மகள் கொரோனா அச்சம் காரணமாக நீர்கொழும்பில் உள்ள ஜெட்வின்புளு நட்சத்திர விடுதியில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டார். அவ்வாறு தனிமைப்படுத்தலிற்காக 14 நாள்கள் விடுதியில் தங்கியிருந்த செலவாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டது.

பி.சி.ஆர் பரிசோதனையின் பின்பு கோவிட் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க மற்றும் இராணூவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் ஒப்பமிட்ட சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழை பெற்றவரை தந்தை என்ற முறையில் அவர் சென்று அழைத்துச் சென்றுள்ளார். இதுவே சர்ச்சைக்கு காரணமாகிவிட்டது.

இதனால் அவரை ஆணைக்குழு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற சாரதி, தேநீர் வழங்கிய அலுவலக உதவியாளர் மற்றும் உறுப்பினரை 14 நாள்கள் கொரோனா தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பவேண்டும் என உத்தியோகத்தர்கள் பலரும் தெரிவித்தனர். இதனையடுத்து ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் அலுவலகத்தில் இருந்து வெளியேறி வீடு சென்றுள்ளார்.

இவ்வாறு வெளியேறும் சமயம் கொரோனா தொற்று இல்லை எனச் சுகாதார அமைச்சினால் வழங்கிய சான்றிதழின் பிரதி ஒன்றை ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் அவர் கையளித்தார். இவை அனைத்தும் நடந்து 100 நாள்கள் கடந்துவிட்ட பின்பு நேற்று யாழ்ப்பாணம் பொலிஸார் இவை தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றனர். இன்றும் அது தொடர்ந்துஇடம்பெறவுள்ளது.

100 நாள்கள் கடந்த பின்பு இந்த விடயத்தை பொலிஸார் தூசு தட்டுவது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.ஆணைக்குழு உறுப்பினர் மற்றும் அவரது மகள் ஆகியோர் அமெரிக்கக் குடியுரிமை கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.