தேர்தலின் பின்னர் புறக்கணிக்கப்படும் தமிழ்

நடைபெற்ற தேர்தலில் இனவாத அரசே பதவிக்கு வந்துள்ளது. அவர்களின் செயற்பாடுகளை உடனடியாகவே ஆரம்பித்துள்ளனர். இதற்கமைவாக நாட்டில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற போர்வையில்  தமிழர்கள் பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, அடாவடித் தனங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் அடுத்த கட்டமாக பெயர்ப் பலகைகளில் உள்ள தமிழ் மொழி எழுத்துக்களை இனந்தெரியாதவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள தமிழ் மொழி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.  பெரும்பான்மையின் தீண்டத்தகாத முகம் தேர்தல் முடிவடைந்த ஒரு வாரத்திலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வீதிகளில் தமிழ் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் பதிலுக்காக நாடு காத்திருக்கின்றது என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதோடு, படங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இலங்கை அரச இலச்சினையுடன் சிங்கள மொழியில் மாத்திரம் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்களும் சமூகவலைத் தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.