தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் முழு நாட்டும் பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இது தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். அதனால் நாட்டினதும், மக்களினதும், நீதிபதிகளினதும், ஊடகவியலாளர்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

புதுக்கடை நீதிமன்றத்தினுள் நடந்த கொலை, நீதிமன்றத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். நீதித்துறையில் பெரும் பணிகளை ஆற்றிவரும் நீதிபதிகளுக்கு குறிப்பிட்டளவு பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், அண்மைய காலங்களில் அவர்களின் பாதுகாப்பை  நீக்குவதாக அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிவில் குடிமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கூட இன்று பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஊடகவியலாளரான சம்முதிதவுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு வழங்கப்பட்டது, ஆனால் இன்று அந்த பாதுகாப்பு அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, விசேடமாக நீதிபதிகளின் பாதுகாப்பு, பொது மக்களினதும், ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களினதும் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.  ஏனெனில் இடம்பெற்ற சம்பவம் பாரிய விடயமாகும். இந்த சம்பவம் குறித்து விசேட விசாரணையை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அவ்வாறே மக்கள் பிரதிநிதிகளினது பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.  அதுதொடர்பான பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது. இதுதொடர்பாகவும் கவனம் செலுத்தி அதற்கு முறையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்கிறோம். இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் மூலம் நீதித்துறைக் கட்டமைப்பு வீழ்ச்சியடை இடமளித்தால்,  முழு சமூகமே சீரழிந்து போகும். எனவே நீதிபதிகளின் பாதுகாப்பை நீக்காமல் அவர்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்துங்கள்.

கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் சொல்லித்தர மேசை கதிரையுடன் வருமாறு தெரிவித்த விடயங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.  போதைப்பொருள் வியாபாரிகளை இரண்டு பெளர்ணமிகளில் இல்லாதொழிப்பதாக தெரிவித்தார்கள். தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி அதற்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதனால் அது வார்த்தைகளில் மாத்திரம் இருக்காமல் செயற்பாட்டிலும் காட்டவேண்டும் என்றார்.