ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு நாள், வடக்கு கிழக்கு மக்களால் வினைவு கூறப்படுகின்றது. அதே நேரம் யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் வணக்க நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும், என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தினார். அவருடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர் உயிர் நீத்தார்,
தியாக தீபம் திலீபன் உயிர் நீத்து 37ம் ஆண்டுகள் கடந்துள்ள போதும் இதுவரையிலும் அவருடைய ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றபடாமல், தமிழ் மக்கள் ஒடுக்குமுறைகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.