தியாகதீபம் திலீபன் நினைவாக வவுனியாவில் ஆரம்பமாகிய நடைபவனி

வவுனியா நகரசபை நுழைவாயிலில் உள்ள பொங்குதமிழ் தூபியில் இருந்து யாழ்ப்பாணம் திலீபன் நினைவு மண்டபம் வரையான ஓர் நடைபவனி இன்று வவுனியாவில் ஆரம்பமாகியது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் இந்த நடைபயணம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இன்று காலை வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தியாகி திலீபன் அவர்களின் உருவப்படம் தாங்கிய வாகனம் ஒன்று  இந்த நடைபவனியில் இணைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையையை மேற்கொள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த நடைபவனி நகர்கின்றது.

இந்நடைபவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், மற்றும் சட்டத்தரணி சுகாஸ், உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

walk 1 தியாகதீபம் திலீபன் நினைவாக வவுனியாவில் ஆரம்பமாகிய நடைபவனிநடைபவனி வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியை தாண்டி பசார் வீதியை நெருங்கிய போது, பொலிசார் தடுத்து ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு ஊர்வலத்தை தொடருமாறு பணித்தனர். இதற்கமைய புதிய பேருந்து நிலையம் வரையும் ஒலிபெருக்கி இல்லாதே நடை பவனி தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.