உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதல் இணைந்து வழங்கிய “தாயக களம்” நிகழ்ச்சியில், அரசியல் ஆய்வாளர் திருமிகு ஜோதிலிங்கம் அவர்களுடன் சமகால தாயக அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவானகலந்துரையாடல் இடம்பெற்றது.
கேள்வி :
திருகோணமலை பிரகடனம் மற்றும் கஜேந்திர குமார் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர் மானங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் :
திருகோணமலை பிரகடனம் கடந்த 14ஆம் திகதி “ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றம்” எனும் அமைப்பி னால் வெளியிடப்பட்டது. அந்த அமைப்பும் அன்றே அறிமுகப்படுத்தப்பட்டது. திருமலை ஆயர் உள்ளிட்ட பல சிவில் தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணத்திலிருந்தும் ஒரு குழு இதில் பங்கேற்றது. சுமார் 20 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, தமிழர் வரலாறு மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து விரிவாக விளக்குகிறது. பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதிலும், இது ஒரு சிறந்த ஆவணமாகக் கருதப்பட வேண்டும்.
அறிக்கையின் மையப்புள்ளிகள் இரண்டு: ஒன்று-பொறுப்புக்கூறல் (Accountability); இரண்டு – தமிழர் களுக்கான அரசியல் தீர்வு. பொறுப்புக்கூறல் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பதிலாக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது எப்படி, எந்த வழிமுறையில் முன்னெடுக்க வேண்டும் என்பதில் தெளிவான திட்டம் முன்வைக்கப்படவில்லை. அரசியல் தீர்வு தொடர்பாக, “சுயநிர்ணய உரிமை உடைய சமஸ்ட்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதில் சிலர் கருத்து வேறுபாடு தெரிவிக்கின்றனர்.
கொள்கை ரீதியான அடித்தளத்தை மட்டும் முன்வைக்க வேண்டும். நடைமுறை வடிவமைப்பை இப்போது வழங்க வேண்டாம் என்பதே ஒரு தரப்பின் நிலைப்பாடு. இந்த வேறுபாடுகள் ஒருங்கிணைந்த குரலை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, விவாதித்து ஒருங்கிணைந்த முடிவுக்கு வருவது அவசியம்.
கேள்வி :
திம்பு கோட்பாட்டை மீள உயிர்ப்பிக்கும் முயற்சி மற்றும் ஆய்வுக்குழு அமைப்பு குறித்து விளக்குங்கள்.
பதில் :
நல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முதலில், அரசாங்கத்தின் ஐக்கியராஜ்ய யோசனையை முழுமையாக நிராகரித்தனர். இரண்டாவது, தமிழர்களுக்கான அரசியல் தீர்வின் அடிப்படை திம்பு கோட்பாடுகளாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மூன்றாவது, இனி எடுக்கப்படும் அரசியல்நிலைப்பாடுகள் ஒரு பொதுச் சபையின் வாயிலாக தீர்மானிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
திம்பு கோட்பாடு தமிழர்களை ஒரு தேசமாக அங்கீ கரிக்க வேண்டும், அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை ஏற்கவேண்டும், சுயநிர்ணய உரிமையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறது. இக்கொள்கைகளை மீள ஆய்வு செய்து, தேவையான திருத்தங்களுடன் ஒருங்கிணைக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் நானும் ஒருவனாக இணைக்கப்பட்டுள்ளேன். இந்த முயற்சி நீண்ட காலத்திற்கு பிறகு சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படும் ஒரு நேர்மையான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
கேள்வி :
பொதுவாக்கெடுப்பு குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துகள் என்ன?
பதில் :
பொதுவாக்கெடுப்பு நடத்துவது பற்றி சிலர் முன்மொழிந்தனர். ஆனால் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி “தமிழீழம்” என்ற கோரிக்கையுடன் போட்டியிட்டு மக்களின் தெளிவான ஆணையைப்பெற்றிருந்தது. அதனால் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்துவது அந்த வரலாற்று ஆணையை பலவீனப்படுத்தக்கூடும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது.
மேலும், இன அழிப்பு தொடர்பான நீதிக்கான போராட்டம் 2009க்கு பின் வலுப்பெற்றது. ஆனால் 1958, 1977, 1983 போன்ற காலகட்டங்களில் இருந்தே தொடர்ச்சியான ஒடுக்குமுறைகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே திம்பு கோட்பாடும்1977 மக்களாட்சி ஆணையும் ஒன்றுக்கொன்று முரண் படுவன அல்ல, மாறாக, அவை தமிழர்களின் அரசியல் உரிமைக்கான தொடர்ச்சியான அடித்தளங்களாகவே பார்க் கப்பட வேண்டும்.
கேள்வி :
சுவிஸ் தூதரகத்தின் அழைப்பு ஏன் இரத்து செய்யப்பட்டது?
பதில் :
சுவிஸ் தூதரகம் தமிழ் கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை உருவாக்க முயன்றது. ஆனால் அந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிவில் அமைப்புகள் வலுவாக முன் வரக்கூடும் என்ற அச்சத்தால், சுமந்திரன் கலந்து கொள்ளத் தயங்கினார் என நான் கருதுகிறேன். அவருக்கு ஐக்கியராஜ்ய யோசனையுடன் நெருக்கம் இருப்பதாலும், பிரதான பேச்சாளராகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசியல் நோக்க மும்காரணமாக இருக்கலாம்.
இந்த முடிவு தமிழர்களின் சர்வதேச அரசியல் வாய்ப்புகளை பலவீனப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு தூதர கங்களுடன்ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமான நேரத்தில் இந்த வாய்ப்பு இழக்கப்பட்டது என்பது வருத்தகர மானது.
கேள்வி :
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் குறித்து உங்கள் பார்வை என்ன?
பதில் :
பழைய பயங்கரவாத தடைக் சட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அதற்கு மாற்றாக மேலும் கடுமையான சட்டம் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது. இது அரசை பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டாலும், அடிப்படையில் குடிமக்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
தமிழ் மக்களுக்கெதிராக பயன்படுத்தப்பட்ட சட்டமே தற்போது சிங்கள மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத் தக்கூடியதாக மாறியுள்ளது. அதனால் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் தமிழ் மக்களின் எதிர்ப்பும் சிங்கள மக்களின் எதிர்ப்பும் வேறுபட்ட அரசியல் பின்னணியைக் கொண்டவை என்பதை கவனிக்க வேண்டும்.
கேள்வி :
சுமந்திரன்-சிறிதரன் மோதல் தமிழரசுக் கட் சியை பலவீனப்படுத்துகிறதா?
பதில் :
இது வெறும் இரு நபர்களுக்கிடையிலான மோதல் அல்ல. தமிழ் தேசிய அரசியலின் திசை குறித்து உள்ள அடிப்படை முரண்பாடு. சுமந்திரன் கொழும்பு மைய அரசியலை முன்னிறுத்துகிறார். அந்த அணுகுமுறை தமிழ் தேசிய கோரிக்கைகளை ஒதுக்கி வைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது. மறுபுறம், சிறிதரன் தேசிய அடையாளத்தை முன்னிறுத்துகிறார்.
தமிழரசுக் கட்சி வட கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் பழம்பெரும் கட்சி. அது பலவீனமடைவது தமிழ் தேசிய அரசியலையே பலவீனப்படுத்தும். ஆகவே இந்த பிரச்சினை கட்சிக்குள் ஜனநாயக முறையில் தீர்க்கப்பட வேண்டும். தனிநபர் அரசியல் நோக்கங்களுக்காக கட்சியை சீரழிக்க அனுமதிக்கக் கூடாது. மக்கள் மற்றும் அறிவுஜீவிகள்இணைந்து தலையிட்டு, கட்சியின் ஒருமைப் பாட்டை பாதுகாக்க வேண்டும்.



