தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவை தமிழக முதல்வர் விரும்பவில்லை

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவின் சுற்றுலா, வனவளத்துறை மற்றும் கிறிஸ்தவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஆனாலும் தமது அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், குறித்த படகுச் சேவையை ஆரம்பிப்பதில் நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் தமிழக முதலமைச்சர் இதை விரும்பவில்லை. இருப்பினும் நாம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். என்றார்.

பலாலி விமான நிலையப் பணிகள் éர்த்தியடைந்ததும் இந்தியாவிற்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால், பயணச் செலவுத் தொகை மிகக் குறைவாகக் காணப்படும். இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.