தற்போதைய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக பிரபாகரன் இருந்திருப்பார் – பொன்சேகா

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறுத்தி வைக்க விரும்பாத இந்தியா, அதனை முடித்துவிட வேண்டும் என்றே விரும்பியது என்று சிறீலங்கா முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிங்கள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்திருந்தால், இப்போது அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருந்திருப்பார்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மேற்கு உலக நாடுகள் அந்தப் போரை எப்படியாவது தற்காலிகமாக நிறுத்தலாம் என முனைப்புக் காட்டின. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போது பாகிஸ்தான், சீனா ஆகியவை எங்களுக்கு ஆயுத உதவியும் கொடுத்தன. இந்தியாவின் நிலைப்பாடு வித்தியாசமாக இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று விரும்பவும் இல்லை. ஏற்கவும் இல்லை. பதிலாக யுத்தத்தை முடித்து விடலாம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது.

இதற்குக் காரணம் இந்தியா சொன்னதை பிரபாகரன் கேட்கவில்லை என்பதுடன், ராஜீவ் காந்தியின் கொலையுடன் அந்தக் கோபம் மிக அதிகமாகியது என்று சரத் பொன்சேகா சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.