தற்கொலைத் தாக்குதல் பயிற்சி- மட்டக்களப்பில் ஆறு பெண்கள் கைது!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி சஹ்ராம் ஹாசிம்மிடம் தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்றார்கள் என்ற சந்தேகத்தில் பெண்கள் ஆறு பேர் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலிரு்நது சென்ற பயங்கரவாத தடுப்புபு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளே குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்ணொருவரும் அவரது 3 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் நேற்று, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில், மட்டக்களப்பு விஷேட பொலிஸ் குழுவினர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நடாத்திய சிறப்பு நடவடிக்கையில் 20 வயதான இளைஞர் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 21/4 தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்ட விவகார விசாரணைகளில் ஏற்கனவே 15 ஆண்களும் மூன்று பெண்களுமாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தற்போது மேலும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.