தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கையின் செயற்பாடுகள் போதுமானதல்ல – இந்தியா

தமிழ் மக்களின் தேவைகள் தொடர்பில் இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்பதுடன், இலங்கை அரசு தான் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான இந்திய பிரதிநிதி இந்திரா மணி நேற்று (12) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் அவதானித்து வருகின்றோம். ஆனால் இலங்கையின் நடவடிக்கைகள் போதுமானதல்ல. இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி எல்லா இன மக்களும் சுதந்திரமாகவும், அடிப்படை உரிமைகளுடனும் வாழ வழிஏற்படுத்த வேண்டும்.

இலங்கை அரசு 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதுடன், மாகாணசபை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கை இலங்கை தொடர்பில் மிகவும் காத்திரமாக வெளிவந்துள்ளது. இலங்கை மீதான நடவடிக்கைக்கு அது உறுப்பு நாடுகளின் ஆதரவுகளை கோரியுள்ள அதேசமயம் இந்தியாவின் அறிக்கையும் காத்திரமாக வெளிவந்துள்ளது.