தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் வழங்கும் அரிய சந்தர்ப்பம்! பொதுவாக்கெடுப்பே எமது விடுதலையின் பொறிமுறை!!வீட்டுக் கல்வியின் பங்களிப்பு

PHOTO 2024 09 04 14 28 48 1  தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் வழங்கும் அரிய சந்தர்ப்பம்! பொதுவாக்கெடுப்பே எமது விடுதலையின் பொறிமுறை!!வீட்டுக் கல்வியின் பங்களிப்பு

ஈழத்தமிழ் மக்கள் சார்பாக, பலதரப்பட்ட சமூக அமைப்புகளும், அவைகளுடன் சேர்ந்து, பல முக்கிய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து, இம்முறை இலங்கை அரசினால் செப்ரம்பர் 21 இல் நடத்தவுள்ள சனாதிபதி தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க முடிவு செய்துள்ளது வரவேற்கக் கூடியது மட்டுமன்றி, அது தமிழர்களின் ராஜ தந்திர அணுகுமுறை ரீதியில் பார்க்கப்பட வேண்டிய தொன்று.

76 வருட சிங்கள ஏமாற்று அனுபவங்களை புறந்தள்ளி, சிங்களத் தலைவர்கள் எமது உரி மைகளை வெள்ளித்தட்டில் தருவார்கள் என்று எதிர்பார்த்து, அவர்களுக்கு மீண்டும் மீண்டும் எமது மக்களை வாக்களிக்க வைக்கும் தன்மான மற்ற கேலிக்குரிய நடைமுறை, இப்போது நிறுத்தப்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்ளமுடியும். இத்தேர்தலின் மூலம், சர்வதேச சமூகத்திற்கு நாம் ஒரு செய்தியை  அனுப்ப வேண்டிய பாரிய தேவை எமக்கு உண்டு. எமது அரசியல் விவகாரம், ஏற்கனவே ஐ.நா. இல் உள்ள ஒரு சர்வதேச பிரச்சினை ஆகும். சர்வதேச பிரச்சினைக்கு, சர்வதேச தீர்வை நாம் சர்வதேசத்திடம் கோர வேண்டும். சர்வதேசத்தின் நேரடித் தலையீட்டுடன் மாத்திரமே, எமக்கு சர்வதேச தரத்திலான தீர்வு கிடைக்கும்.

எமது அரசியல் பிரச்சினையானது, 1619 இல் போர்த்துக்கீசர் படை, எம் அரசன் சங்கிலி குமரனின் இராஜ்யத்தை அழித்ததில் இருந்து ஆரம்பிக்கின்றது. ஆங்கிலேயர் 1833 இல், தமிழ் தேசத்தை சிங்கள தேசத்துடன் ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இணைத்த போது அது இன்னொரு வடிவத்தை எடுக்கின்றது. 1948 இல் ஆங்கிலேயர்கள் சிங்களவர்களுக்கு சுதந்திரம் வழங்கியபோது,  தமிழர்கள் சிங்களவர்களின் கீழ் தள்ளப்பட்டு, எமது அரசியல் பிரச்சினை தற் போதைய வடிவத்தை எடுக்கின்றது.

1948 இல், ஆங்கிலேயர்கள், தமது ஆட்சியை சிங்களவர்களிடம் ஒப்படைத்த போது தமிழர்களிடம்  அதற்கு சம்மதம் எடுத் திருக்கவில்லை. தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கும் சந்தர்ப் பம் வழங்கப்படவில்லை. 1619 இற்கு பின்னர் தமிழர்களுக்கு சுதந்திரம் ஒருபோதும் கிடைக்க வில்லை. சிங்களர்களின் கீழ் வாழ்வதற்கு தமிழர் கள் ஒருபோதும் சம்மதிக்கவும் இல்லை. எனவே, இது ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்கம் (improper and incomplete decolonization) ஆகும். இது சர்வதேச சட்டங்களின்படி கையாளப்பட வேண்டிய விடயமாகும்.

சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட தும், இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றதுமான  தமிழின அழிப்பு, அடக்குமுறை, உரிமை மறுப்பு, நிலப்பறிப்பு, ஆலய அழிப்பு, துயிலும் இல்ல அழிப்பு, சிங்களமயமாக்கல் போன்றவை, எமது பிரச்சினையை அவசர மற்றும் அவசியமான விடயமாக ஆக்குகின்றது. நாம் அவசரமாக செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன.

30 வருட அகிம்சை போராட்டமும், 30 வருட ஆயுதப் போராட்டமும் எமது விவகாரத்தை இன்று சர்வதேச அரங்கில் நிறுத்தி வைத்துள்ளது. அதில் வீரகாவியங்கள் பல படைத்து தமிழ் வீரர் கள் கொடுத்த தியாகங்கள் எண்ணிலடங்காது! அது விலைமதிப்பற்றது. அதனை வீணாக்காது, எஞ்சி இருக்கும் தூரத்தை, பாரிய போராட்டங்கள் எதுவுமின்றி, எமது சாதுர்ய மூலோபாயத்துடனும், சர்வதேச ராஜதந்திர வியூகத்துடனும் நாம் அடைய முடியும், அடைய வேண்டும். அதற்குரிய அடிப்படை  வேலைகளை இம்முறை, பொது வேட்பாளர் மூலமாக நாம் செய்ய வேண்டிய பாரிய தேவை எமக்குண்டு!  இன்று எமது விடுதலைப் போராட்டம் மூன்றாம் கட்டத்தில் நிற்கின்றது – இன்றைய கட்டம் இராஜதந்திர மூலோபாயம் ஆகும்.

சர்வதேச சட்டத்தின் படியும், ஐ. நா. தீர்மானங்களின் மூலமும், ஈழத்தமிழர்கள் சுயநிர் ணய உரிமைக்கும், பூரண சுதந்திரத்திற்கும் தகுதி யானவர்கள்.  பொதுவாக்கெடுப்புக்கான பூரண உரிமை எமது மக்களுக்கு உண்டு. அவ்வாறான ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலமாகத்தான் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப் படுத்த முடியும். சர்வதேச நியதிகளின்படி, இந்த பொதுவாக்கெடுப்பு தாயகத்தில் உள்ள தமிழர் களையும் புலம்பெயர் தமிழர்களையும் வாக்களிக்க அனுமதிக்கும்.

சுயநிர்ணயம் என்பது மக்களால் நேரடியாக தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர ஒரு சில அரசியல்வாதிகள் அல்லது  ஒரு  சில அரசியல் கட்சிகளால் அல்ல. மக்கள் பிரதிநிதிகளால், அதி முக்கிய விடயங்களை மக்களுக்காக தீர்மானிக்க முடியாது, அது சுயநிர்ணயம் ஆகாது. சுதந்திரத்திற்கான பொது-வாக்கெடுப்பின் மூலம் மட்டுமே நாம் எமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க முடியும்.

பதின்மூன்று, சமஷ்டி, அதிகாரப்பகிர்வு போன்ற உள்நாட்டுத் தீர்வை நாம் கோரி, சர்வதேசப் பிரச்சினையை உள்நாட்டு நிர்வாகப் பிரச்சினையாக மாற்றக் கூடாது. உள்நாட்டுப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிடாது. எங்களின் விவகாரம் சர்வதேச பிரச்சினை, அதனை மாற்றாது, நாம் சர்வதேசத் தீர்வை, சர்வதேச சமூகத்திடம் கோர வேண்டும்.

சில தமிழ் கட்சிகள் மீண்டும் சமஷ்டி கோரிக்கையை முன் வைக்கின்றன.  30 வருட கடின சுதந்திரப் போராடத்திற்குப் பின்னர்,  நாம் மீண்டும், 48 ஆண்டுகளுக்கு முன்பு  கைவிட்ட அதே சமஷ்டியை கோரினால், தமிழ் மக்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவற்றவர்களாக உள்ளோம்  என்ற தவறான செய்தியை சர்வதேச சமூகத்திற்கு அனுப்புவதாக இருக்கும். 74% பலம் பொருந்திய, இனத்துவேசம் கொண்ட சிங்களவர்களுடன், சமஷ்டி,  அதிகாரப்பகிர்வு போன்ற உள்நாட்டு நடைமுறைகள் வேலை செய்யாது!  அதன் மூலம், தமிழர்க்கு போதிய பாதுகாப்பை கொடுக்க முடியாது, மீண்டும் ஒரு இனப்படுகொலையை தடுக்க முடியாது. இது போன்ற பிரச்சனைகள், சமஷ்டி போன்ற உள்நாட்டு தீர்வுகளினால்  தீர்க்கப்பட்டதற்கு உலக உதாரணங்கள் கிடையாது.  தமிழ் இனப் படுகொலையை சில நாடுகள் அங்கீகரித்த பின்னரும் நாம், எம்மை அழிக்கத் துடிக்கும் சிங்களர்களின் கீழ் வாழ கட்டாடயப்படுத்த முடியாது. அவர்களின் ஆதிக்கத்திற்கு அப்பால் உள்ள மாற்று தீர்வுகளை நாம் ஆராய வேண்டும்.

இதே போன்ற பல பிரச்சினைகள் ஐ.நா. அல்லது சர்வதேச சமூகத்தால் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு மூலம் சர்வதேச சமூகத் தால் தீர்க்கப்பட்டுள்ளன. இதற்கு பல உலக உதாரணங்கள் உண்டு. சுதந்திரத்திற்கான பொதுவாக் கெடுப்பு மூலம் சுதந்திரம் பெற்ற தென்-சூடான், மாண்டினீக்ரோ, கிழக்கு-திமோர், பொஸ்னியா, எரித்திரியா, கொசோவோ போன்றவை சில உதாரணங்களாகும். இதுவே உலக யதார்த்தம்.  இந்த யதார்த்தத்தை புரிந்து, சர்வதேசத்திடம் உள்நாட்டுத் தீர்வை கேட்காது, சர்வதேசத் தீர்வை கோர வேண்டும். எமது அரசியல் தீர்வு, அமைதியாகவும் சனநாயகமுறையிலும், எமது சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தும் முறையில், ஐ. நா. அல்லது சர்வதேச சமூகத்தினால் நடாத்தி, கண்காணிக்கப்படுகின்ற ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமாக காணப்படல் வேண்டும். எனவே , எமக்கான தீர்வு ஒரு பொது வாக்கெடுப்பு மூலமாகத்தான் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் சர்வதேச சமூகத்திற்கு உணர்த்த வேண்டும்.

சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பு அணுகுமுறை விடுதலைப் புலிகளின் காலத்தி லேயே பரிந்துரைக்கப்பட்டு வரவேற்கப்பட்ட ஒரு பொறிமுறையாகும்.  மார்ச் 05, 2009 இல், அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தின் சாண்டா கிளாரா மாவட்ட சனநாயக கட்சியின் மத்திய குழு  நிறைவேற்றிய தீர்மானத்தில், ஐ.நா இனால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்ற ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் ஈழத்தமிழர்களின் சுதந்திரம் தீமானிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதனை தாம் வரவேற்பதாகவும், எமது மக்களின் விருப்பத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்றும், அன்றைய அரசியல் துறை பொறுப்பாளர் திரு. பா.நடேசன் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரி வித்திருந்தார்.

தமிழ் நாடு சட்ட மன்ற பேரவையில் 2013 இல் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், களத்திலும் புலத்திலும் உள்ள ஈழத்தமிழரால், ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என வும், இது சம்பந்தமாக  ஐ. நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவருவதற்கு இந்தியா நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறது.

முதலாவது வடமாகாண சபை, தனது இறுதித் தீர்மானமாக செப்டம்பர் 11, 2018 இல், உறுப்பினர் கௌரவ எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களால் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சி.தவராசா மற்றும் கௌரவ உறுப்பினர் அயூப் அஸ்மின் ஆகியோர்களால் கூட்டாக வழிமொழியப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தி கண்காணிப்படுகின்ற ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2022 இல் ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 51/L.1, பொதுவாக்கெடுப்பு ஒரு நல்ல விடயம் என்று கூறியிருந்தது.

இவ்வருடம் மே 15, 2024 இல், அமெரிக்கா வாழ் ஈழத்தமிழ் மற்றும் தமிழ்நாடு உறவுகளின் கடின உழைப்பின் பின்னணியில், அமெரிக்கா பிரதிநிதிகள் சட்டசபையில், ஈழத்தமிழர்க்கு, சரித்திர முக்கியம் வாய்ந்த சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பு தீர்மானம் 1230, கௌரவ உறுப்பினர் வைலி நிக்கல் அவர்களால் அறி முகப்படுத்தப்பட்ட விடயம், அமெரிக்க அணுகு முறையில் ஒரு பாரிய திருப்புமுனையாகப் பார்க் கப்படுகின்றது.

இவை அனைத்தும் பொதுவாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இதுவே, சுயநிர்ணய உரிமையை செயல் முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு உலகளாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, நடைமுறையில் உள்ள ஒரே ஜனநாயக பொறிமுறையாகும். அந்த பொறிமுறையை நாமும் உரத்து கேட்பது எமது விடுதலைக்கு மிகவும் இன்றியமையாதது.

இந்த செய்தியை சர்வதேச சமூகத்திற்கு அனுப்புவதற்கு, இந்த தேர்தலும் தமிழ்  பொது வேட்பாளரும் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற ஒரு அரிய சந்தர்ப்பமாகும்.

நாம் கேட்கும் பொதுவாக்கெடுப்பு ஒரு நீண்ட செயல்முறையாகும். தமிழர்களின்  பொது வாக்கெடுப்பு கோரிக்கையை, சர்வதேச சமூகம் ஏற்கும்போது, ஐ.நா. இடைநிலை  நிர்வாகம் தமிழர் தாயகத்திற்கு கொண்டு வரப்படும். வாக்காளர் தகுதி, புவியியல் எல்லை, வாக்குச்சீட்டின்  உள்ள டக்கம், புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச வாக்

களிப்பு மையங்கள் போன்ற அனைத்து விட யங்களிலும், சர்வதேச சமூகத்துடன் உடன்பாடு ஏற்படுத்தப்படும். மக்களுக்கு இதன் நன்மை தீமைகளை கற்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் போதிய நேரம்  ஒதுக்கப்படும். தமிழர் தாயகத் தில், எதுவிதமான அச்சுறுத்தலுமின்றி, சிங்களப்

படைகளின் பிரசன்னமின்றி, ஐ.நா. அமைதி காக்கும் படையின் பிரசன்னத்துடன் பொது வாக்கெடுப்பு நடைபெறும். மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு, அவர்கள் விரும்பியபடி சுதந்திரமாக வாக்களிக்க  சந்தர்ப்பம் உண்டாகும். மக்களின் கூட்டு முடிவு மதிக்கப்படும். இந்த சர்வதேச முறையின்படி, எமது சுயநிர்ணய உரிமை செயல் படுத்தப்படும். முழு செயல் முறையையும் செயல்படுத்த 2-5 ஆண்டுகள் ஆகலாம்.

எனவே, களத்தில் உள்ள மக்கள், பொது வேட்பாளரின் பின்னால் ஒன்றிணைந்து, சர்வதேச சமூகத்திற்கு தெளிவான செய்தியை வழங்குவதற்கு வாக்களிக்க வேண்டும்.  அதை வைத்து, புலத்தில் உள்ள தமிழ் மக்கள், சர்வதேச ரீதியில் பொதுவாக்கெடுப்புக்காக பிரச்சாரம் செய்து, எமது விவகாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும். களத்தில் கேட்காததை, புலத்தில் கேட்க முடியாது. எனவே, முதலில் களத்தில் உள்ள மக்கள், பொதுவாக்கெடுப்பு கேட்க்கின்றார்கள் என்கின்ற  செய்தி வெளி உலகத்திற்கு கேட்க வேண்டும்.

செப்ரம்பர் 21 இல் நடைபெறப் போவது ஜனாதிபதித் தேர்தலே தவிர பொதுவாக்கெடுப்பு அல்ல. ஆகையினால் இந்த அணுகுமுறையில்  நாம் தோற்பதற்கு இடமில்லை. ஒவ்வொரு வாக்கும் நமக்கு வெற்றிதான். இதன் முக்கிய நோக்கம், நமது மக்களில் ஒரு பகுதியினர் பொதுவாக்கெடுப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை உலகுக்கு காட்ட வேண்டும் என்பதுதான். ஆம், நாம் அதிக வாக்குகளைப் பெறும்போது,  எங்கள் கோரிக்கை மேலும் பலப்படுத்தப்படும்.

இன்று நாம்  நிற்கும் கட்டமான இராஜதந்திர மூலோபாயம்  என்பது, களத்தில் உள்ள மக்களும்,  புலத்தில் உள்ள மக்களும் ஒத்துழைத்து ஒன்றாக செய்ய வேண்டிய வேலை. ஆனால் எங்களுக்கு இதில் வெவ்வேறு பாத்திரங்கள் உள்ளன. புலம் பெயர் மக்களும் இந்த பொதுவாக்கெடுப்பில் வாக்களித்து, எமது தாயகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தகுதியுடையவர்கள் என்பதால், அவர் களுக்கும், களத்தில் உள்ள மக்களுக்கு இருக்கும் அதே கடமையும், பொறுப்பும், உரிமையும், இந்த பொதுவாக்கெடுப்பு விடயத்தில் உள்ளது. இதில் இரு பகுதியினருக்கும் கூட்டுரிமை உண்டு.

ஆகவே, களத்தில் இருக்கும் எம் ஈழத் தமிழ் மக்களே! அரியநேத்திரன் வழங்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்! சங்கு சின்னத்திற்கு பெருவாரியாக உங்கள் வாக்கு களையிட்டு, எமக்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும் என்கின்ற மாபெரும் செய்தியை சர்வதேசத்திற்கு பலமாக கேட்க்கும் படியாக சரித்திரம் படையுங்கள்!! சர்வதேசப் பொறுப்பை மேற்கொண்டு செல்ல புலம்பெயர்ந்தோர் காத்திருக்கின்றார்கள்!!! எமது தேசியக் கடமை நமக்காக காத்திருக்கின்றது.