தமிழ் அரசுக் கட்சி வழக்கில் சுமுகத் தீர்வுக்கு இணக்கம் – அரசியல் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு விவகாரத்தில் சுமுகமான தீர்வை எட்டுவதற்கு சுமந்திரன், சிறீதரன் இணக்கம் எட்டியுள்ளனர். இதன் மூலம், அந்தக் கட்சிக்கு எதிரான வழக்கு விரைவாக நிறைவுக்கு வரும் என்று கருதப்படுகின்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் வவுனியாவில் உள்ள அந்தக் கட்சியின் பணிமனையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கை
விரைவாக நிறைவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டது.

தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வழக்கில் எதிராளியாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தமது கருத்துகளை ஏற்கனவே நீதிமன்றுக்கு தெரிவித்துள்ள நிலையில், அந்த வழக்கில் முன்னிலையாகாத எதிராளிகளில் ஒருவரான சுமந்திரன் தனது கருத்தை பதிவு செய்வதற்காகவே இந்த வழக்கு தவணையிடப்பட்டிருந்தது.

எனவே, எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாவார். ஜனாதிபதி சட்டத்தரணியான அவர் மன்றில் தனக்காகத் தானே வாதிடுவார் என்று கூறப்படுகின்றது. இதனால், அன்றைய தினம் அதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் ஆவணங்களை சமர்ப்பிப்பார் என்று தெரிகின்றது.

நீதிமன்றின் அனுமதியை பெற்ற பிற்பாடு – சுமந்திரன் தனது கருத்தை நீதிமன்றுக்கு தெரியப்படுத்துவார். இதன்போது, கட்சியினர் முன்னர் மன்றுக்கு அளித்த நிலைப்பாட்டுக்கு மாறான கருத்தை வெளியிடாதவாறான இணக்கத்தை தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு எட்டியுள்ளது. எனவே, மிகக் குறுகிய காலத்திலேயே – அதாவது ஓரிரு நீதிமன்ற தவணையிலேயே வழக்கை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டிக்கின்றது என்று அறிய வருகின்றது.