தமிழ்த்தேசிய கட்சிகளின் பலவீனம். தேசியமக்கள் சக்திக்கு  பலம்!: பா.அரியநேத்திரன்

தமிழ் தேசிய கட்சிகளின் பலவீனம் தேசிய மக்கள் சக்திக்கு பலமாக மாறியது என்பதே உண்மை. கடந்த 2024, நவம்பர் 14 ல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் பெற்ற ஆசனங்களை விட தேசிய மக்கள் சக்தி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த உண்மை வெளியில் பலருக்கு தெரியவில்லை இதனை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கினாலும் அதனை மறைப்பதற்காக சிலர் தவறான கருத்துக்களை பரப்புவதை காணலாம்.
குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக்கட்சி வடகிழக்கில் இருந்து மக்களால் எட்டுமாவட்டங்களிலும் 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டனர்  அந்த 07 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் 01 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்தமையால் மொத்தமாக 08 ஆசனங்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு 01 ஆசனமும், ஐனநாய தமிழ்தேசிய கூட்டணி க்கு 01 ஆசனமாக தமிழ்தேசிய கட்சிகளுக்கு மொத்தம் 12 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. தமிழ்தேசிய கட்சி சாராத சுயேட்சை குழுவில் வைத்தியர் அர்ச்சுனா தெரிவானார்.
ஆனால் வடகிழக்கில் எட்டு மாவட்டங்களில் இருந்து தேசிய மக்கள் சக்திக்கு மொத்தமாக 12, ஆசனங்கள் கிடைத்துள்ளன, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 08, ஆசனங்கள் கிடைத்ததை வடக்கு கிழக்கு மக்கள் தமிழரசுக் கட்சியை ஆதரித்துவிட்டனர். தாமே வடகிழக்கு மக்களின் ஆணையை பெற்ற பெரிய கட்சி, வடக்கு கிழக்கு மக்களின் ஆணை பெற்ற கட்சி என கூறுவது பச்சைப்பொய் இது முழுப்பூசணியை சோற்றில் புதைக்கும் தவறான கருத்தா கும்.
தேசியமக்கள் சக்தி கட்சியில் 07 தமிழர்களும், 05, சிங்களவர்களும் வடகிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர் 05 சிங்கள பாராளுமன்ற உறுப்பி னர்களை நீக்கி விட்டு பார்த்தாலும் 07 தமிழர்கள் தேசியமக்கள் சக்தியிலும், 07 தமிழர்கள் தமிழரசுக்கட்சிலும் தெரிவுசெய்யப்பட்டனர் என்றால் வடகிழக்கு தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகள் மீது கொண்ட வெறுப்பே சிங்கள கட்சியான தேசியமக்கள் சக்திக்கு இந்தளவு ஆசனங்கள் கிடைத்தமைக்கான காரணம் என்பதை புரிந்து கொள்வது ஈழத்தமிழர்களின் கடமை.
கடந்த 2024,  பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கட்சிகளாலும். தேசிய மக்கள் சக்தியாலும் வடக்கு கிழக்கில் எட்டுமாவட்டங்களிலும் இருந்து தெரிவான உறுப்பினர்கள் விபரம்…
இலங்கைத்தமிழ் அரசுக் கட்சி.
1. சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம்.
2. துரைராசா ரவிகரன், வன்னி.
3. சண்முகம் குகதாசன், திருகோணமலை.
4. ஞானமுத்து ஶ்ரீநேசன், மட்டக்களப்பு.
5. இராஜபுத்திரன் சாணக்கியன், மட்டக்களப்பு.
6. இளையதம்பி ஶ்ரீநாத், மட்டக்களப்பு.
7. கவீந்திரன் கோடீஷ்வரன்,அம்பாறை.
8. பத்திநாதன சத்தியலிங்கம்.தேசியபட்டியல்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
1 கஜேந்திரகுமார். பொன்னம்பலம் – யாழ்ப்பாணம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி.
தமிழீழ விடுதலை இயக்கம்
2 செல்வம் அடைக்கலநாதன் – வன்னி
சுயேட்சைக் குழு
1. இராமநாதன் அர்சுனா-யாழ்ப்பாணம்.
தேசிய மக்கள் சக்தி
1. கருணானந்தன் இளங்குமாரன், யாழ்ப்பாணம்.
2. சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜன், யாழ்ப்பாணம்.
3. ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன்,யாழ்ப்பாணம்.
4. செல்வராசா திலகேஷ்வரன்,வன்னி.
5. மயில்வாகனம் ஜெகதீஷ்வரன்,வன்னி.
6. கந்தசாமி பிரபு,மட்டக்களப்பு.
7. அருண் கேமச்சந்திரன்,திருகோணமலை.
8. ரொஷான் அக்மீமன,திருகோணமலை.
9. வசந்த பியதிஸ்ஸ,அம்பாறை.
10. . மஞ்சுள ரத்நாயக்க,அம்பாறை.
11.  பிரியந்த விஜேரத்ன,அம்பாறை.
12.  முத்துமெனிக்கே ரத்வத்தே,அம்பாறை.
இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 தொடக்கம் 2020  வரை நடைபெற்ற 16   பாராளுமன்ற தேர்தல்களில் வடகிழக்கில் இருந்து எந்த ஒரு சிங்கள பெரும்பான்மை கட்சியும் 12 பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு கட்சியில் இருந்து தெரிவான சரித்திரம் இல்லை. ஈழ விடுதலைப் போராட்டம் அகிம்சை ரீதியிலும், ஆயுத ரீதியிலும் விடுதலைக்காக போராடிய மண்ணில் இதுவரை தமிழ்த்தேசிய கட்சிகளே வடகிழக்கில் கூடிய ஆசனங்களை பெற்ற வரலாறு இருந்தது சிங்கள கட்சி எதற்கும் அந்த வரலாறு இல்லை ஆனால் அது 17 வது  பாராளுமன்ற தேர்தலில் 2024 ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முறியடித்துள்ளது என்ற கசப்பான உண்மையை ஈழத்தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இது தமிழ்தேசிய கட்சிகளாக 2009 மே 18 க்கு பின்னர் குட்டிபோட்டு பத்து பன்னிரண்டு காட்சிகளாகவும், தலைவர்களாகவும் உள்ளவர் கள் சிந்திக்க வேண்டும்.
கடந்த தமிழர் திருநாள் 2026,ஜனவரி 16 ல் ஜனாதிபதி அநுரா யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து பொங்கல் விழாக்களில் கலந்துகொண்டு சில அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்துள்ளார். கடந்த ஒருவருடத்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கு நான்கு தடவைகள் சென்றுள்ளார். 2025 ஜனவரி 31 மே 17 செப்டம்பர் 01  தற்போது 2026,ஜனவரி 16 ஆகிய தினங்களில் அவர் பதவி ஏற்ற பின்னர் யாழ்ப் பாணத்தில் சென்று பல அபிவிருத்திகளை மேற்கொள்ளும் நிலைமை தமிழ்தேசிய கட்சிகளின் பலவீனத்தால் ஏற் பட்டது என்பதே உண்மை.
இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் சில வேளை மாகாணசபை தேர்தல் வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெற்றால் தேசியமக்கள் சக்தியின் ஆதரவு இல்லாமல் செய்து வடமாகாண சபையையும், கிழக்கு மாகாண சபையையும் தனித்து ஆட்சியமைக்க கனவு காணும் தமிழ்தேசிய கட்சிகள் இப்போதே சிந்தித்து தாம் விட்ட தவறை சீர் செய்து ஒற்றுமை பட வேண்டும். இல்லை எனில் தனித்தனி கட்சிகளாக சிதறி பல சின்னங்களில் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டால் அது மேலும் தேசிய மக்கள் சக்தி ஆளும் தரப்புக்கே சாதகமாக மாறும்.
இலங்கைத் தமிழ் தேசிய கட்சிகள் தற்போதைய  பாராளுமன்றத்தில் எட்டு ஆசனங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ள கட்சி என மார்தட்டினாலும் அந்த எட்டு ஆசனங்களை பெற்ற வடக்கு கிழக்கில் 12, ஆசனங்களை சிங்கள கட்சிக்கு தாரைவார்த்துக் கொடுத்த உண்மையை நெஞ்சில் கைவைத்து ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
தமிழ் தேசிய கட்சிகள் எல்லாம் ஒற்றுமைப்பட வேண்டும் என  தமிழரசுக் கட்சித்தலைமை கூறுவதற்கு முன்னர் தமிழரசுக்கட்சி இரண்டு அணியாக  2024  ஜனவரி 21 தொடக்கம் 2026  ஜனவரி 21 வரை இரண்டு வருடங்களாக இரண்டு அணியாக  நிரந்தர தலைவரோ, நிரந்தர செயலாளரோ இன்றி மத்தியகுழுவில் சுருங்கி கட்சி உள்ளது என்பதை உணரவேண்டும். தமிழ்த்தேசிய உறுதியான கொள்கை உள்ளவர்களை ஓரம் கட்டி ஒதுக்கி செயல்படுவதால் எதிர்வரும் மாகாணசபை தேர்தல்களில் வடக்கு மாகாண சபையிலும், கிழக்கு மாகாண சபையிலும் எதிர்பார்த்த ஆசனங்களை பெறமுடியாது.
கடந்த 2013 ல் வடமாகாணசபையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களுடன் வடமாகாண சபையை கைப்பற்றியது போல் இம்முறை தமிழரசுக்கட்சி அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களை பெற முடியாது. ஏனைய தமிழ்தேசிய கட்சிகளும் பிரிந்து தனித்தனியாக வடமாகாணசபை தேர்தலில் பல சின்னங்களில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டு மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு ஆசனங்கள் அதிகரிக்க வாய்புகள் உண்டு.
கிழக்கு மாகாணசபை தேர்தல்களில் 2008 ல் தமிழர் ஒருவர் முதலமைச்சரான வரலாறும் சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் அவருடைய தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் கேட்டு தெரிவாகவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் வெற்றிலைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான்,  ஹிஸ்புல்லா இருவரும் சேர்ந்து போட்டியிட்டதால் அந்த கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரும், முஸ்லிம்களும் வாக்களித்தமையால் பிள்ளையானும், கிஷ்புல்லாவும் வெற்றிபெற்றனர். இருவரும் ஏட்டிக்கு போட்டியாக தாமே முதலமைச்சர் என கூறி ஊடகங்களில் கருத்து கூறினர்.
ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிள்ளை யானை முதலமைச்சராகவும், கிஷ்புல்லாவை சுகாதார அமைச்சராகவும் நியமித்தார். 2012 கிழக்கு மாகாணசபை தேர்தலில் முதன்முதலாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டபோதும் கிழக்கு மாகாணசபையில் 11 ஆசனங்களை மட்டுமே பெற முடிந்தது அதில் நஜீப் ஏஅகமட் முதலைமைச்சரானார். பின்னர் 2015  நல்லாட்சி அரசில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணக்கப்பாடு அரசியல் ஆட்சியாளருடன் சேர்ந்து இயங்கியதால் 2015 ல் கிழக்கு மாகாணசபையிலும் இணக்கப்பாடு அரசியல் ஆட்சி செய்தனர். அதிலும் முதலமைச்சர் பதவி முஸ்லிம் உறுப்பினர் நசீர் அகமட் பெற்றார். தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு அமைச்சர்பதவியும், பிரதி தவிசாளர் பதவியும் கிடைத்தன.
அதனால் கிழக்கு மாகாணத்தில் மக்கள் ஆதரவை தவிர எதிர்ப்பே தமிழ்த்தேசிகூட்டமைப்புக்கு ஏற்பட்டது.
எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் அறுதிப்பெரும்பான்மையை எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிகளும் பெறமுடியாது, ஆனால் முஸ்லிம்  கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கிழக்கில் மாகாணசபை தேர்தலை சந்திக்கும் பேச்சு வார்த்தைகளை முஸ்லிம் உலாமா சபைகளும், பள்ளிவாசல் சமூகமும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து இப்போதே மேற்கொண்டு வருகின்றனர். இதுவும் தமிழ்தேசிய கட்சிகளுக்கு பாடமாக அமையும்  என்பது குறிப்பிடத்தக்கது.