தமிழினப்படுகொலை நினைவுத்தூபி விவகாரம்- ஹரி ஆனந்தசங்கரி கருத்து

இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் என கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு  வியாழக்கிழமை (15) அடிக்கல் நாட்டப்பட்டது.  இதற்கு இலங்கை அரசு கடுமையான கண்டனங்க்களைத் தெரிவித்து வருகின்றது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி, ‘எமது கூட்டிணைவு மற்றும் உறுதிப்பாடு என்பவற்றுக்கான வலுவான அடையாளமாகத் திகழக்கூடியவகையில் பிரம்டனில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரித்த முதலாவது தேசிய பாராளுமன்றம் என்ற வரலாற்று முக்கியத்துவத்தையும் கனடா உரித்தாக்கியிருக்கின்றது’ எனத் தெரிவித்துள்ளார்.