தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கொலை 14 வது நினைவு நாள்

29 ஜனவரி 2006 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனங்கள் மட்டக்களப்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கருணா-பிள்ளையான் தலைமையிலான குழுவினரால் இந்த வாகனங்கள் வெலிக்கந்தையில் வழிமறிக்கப்பட்டது. இதில் பயணம் செய்தவர்களில் ஏழு பேர் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் வட்டக்கச்சியைச் சேர்ந்த தனுஸ்கோடி பிறேமினி.

பிறேமினி, இக் குழுவைச் சேர்ந்த பிரதீபன் என்றும் அழைக்கப்படும் சிந்துயன், சித்தா அழைக்கப்படும் பிரதீப்,ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன்,சச்சி என்று அழைக்கப்படும் சாந்தன், ஜீவா என்று அழைக்கப்படும் திலகன் இவர்களினால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இறுதியில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஏனையோரும் படுகொலை செய்யப்பட்டனர். என்று பிரபல அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் . ஜெயராஜ், கருணா குழுவினர் ஒருவரை மேற்கோள் காட்டி அவர் எழுதிய “The tragic fate of TRO employees abducted by Karuna cadres“ எனும் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் 5 பேர் கடத்தல் செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 02:15 ஈழம்] [ம.சேரமான்]

மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது வெலிக்கந்தையிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையடியில் வழிமறித்த அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் 5 பேரை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளனர்.

வாகனம் ஒன்றில் வந்த ஆயுதம் தரித்த கடத்தல்காரர்கள், பணியாளர்கள் பயணித்த வாகனத்தின் குறுக்காக தங்களது வாகனத்தை நிறுத்தி 5 பேரைக் கடத்திச்சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் என்று கூறியபோதும் அவர்கள் எவ்வித ஈவிரக்கமுமின்றித் தாக்கப்பட்டு கண்களைத் துணிகளால் மூடி கதறக்கதற வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றனர்.

அவர்களுடன் பயணித்த ஏனைய பணியாளர்கள் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பதற்றத்திலும், அச்சத்திலும் யாருடனும் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பின்றி தொடர்ந்தும் பயணிக்க முடியாமல் கடத்தல்காரர்களால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள், கடத்தப்பட்டு நான்கு மணிநேரத்தின் பின்பே தப்பி வந்தவர்களால் தெரிவிக்கப்பட்டதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர்களில் நால்வர் தொடர்பான விவரம்:

1) சுரேந்திரன் (சிறுவர் இல்லங்களின் இணைப்பாளர்)

2) செல்வி.பிறேமினி (மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்காளார்

3) இரவி (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)

4) வசந்தன் (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)

கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் தெரியவில்லை.