தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் – இன்றும் – (தேடல் 4) – புலவர் நல்லதம்பி சிவநாதன்

இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளா?

1956இலிருந்தே சிங்களப் பௌத்த பெரும்பான்மை தொடர்ச்சியாக முன்வைத்து வந்த வாதங்களுள் ஒன்று, இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளே என்பது தான்!

இதனைத் தான் சிங்கள மக்களுக்குப் போதித்து வந்தது சிங்களப் பௌத்த இனவாதப் பீடங்கள். இவை கல்விப் பீடங்களாக இருக்கலாம், மதபீடங்களாக இருக்கலாம், இல்லை அரசியல், பொருளாதார பீடங்களாக இருக்கலாம். இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் இவ்வாறான ஒரு பிரச்சாரக் கருத்தியலையே எமது பாலப் பருவத்திலும், சிறுவர் பராயத்திலும் பேசியும், எழுதியும், போதித்தும் வந்தன.

தமிழர்கள் சிங்களருக்குப் பின்னர் வந்து குடியேறியதன் விளைவாகவே இவர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறினார்களெனவும், குறிப்பாக இலங்கையின் பிடரிப் பக்கமாகக் கடல் வழியே வந்து குடியேறினரெனவும் சிங்களப் புத்திசீவிகளும், மதவாதிகளும் பிரச்சாரம் செய்து வந்தனர். இதனடிப்படையிற்றான் இலங்கைத் தீவு சிங்களர்க்கே என்ற வாதம் சிங்கள மக்களினால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தியல் தத்துவமாகப் பரவி வந்தது.

உண்மையில் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய ஆக்கிரமிப்புக்களினால் சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்பெற்ற தமிழர் ராசதானிகள் பற்றியும், ஆண்ட மன்னர்கள் பற்றியும், எமது தொல்குடி வரலாறு பற்றியும் ஆழமாகவும், வரலாற்று ஆதாரங்களோடும் அறியக்கூடிய ஒரு வாய்ப்பற்ற தேசிய இனமாகவே நாம் அப்போது இருந்தோம் என்பதில் எனக்கு எதுவித ஒளிவுமறைவுமில்லை.

இலங்கையின் பிடரிப் பக்கம் அதாவது வடமராட்சி, வடமத்திய கிழக்கிலங்கைக்கும் தென்னகத்திற்குமிடையிலான பூர்வீக நிலவியல் –பண்பாட்டு வாழ்வியல் – தொல்லியற் தொடர்புகளைப் பற்றி சிந்திப்பதற்கான எதுவித தூண்டுதலும், உசாத்துணைகளும் எமக்கு அப்போது இருக்கவில்லையென்றே கூற முடிகிறது.

நான் முன்னர் குறிப்பிட்டது போல ஆங்கிலக் கல்வி கற்றவர்களும், மேற்குலக ஆய்வுகளையே தமது உயிர்மறைகளாக ஏற்றுக் கொள்ளப்படுபவர்களையும் நம்புகின்ற ஓர் அப்பாவித்தனமான அறிவியல் – கல்விப் பண்பாடே நம்மிடை அக்காலங்களிற் காணப்பட்டது எனலாம்.

எனவே இந்நிலையில் இலங்கையின் பூர்வீகக் குடிகள் சிங்களவர்கள் தானென எம்முள் சிலரும் வாதிக்கக் கேட்டுள்ளோம். இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களாக இருந்திருந்தால், ஏன் பிறமாகாணங்களில் தமிழர்கள் குடியேறியிருக்கவில்லை என்று வாதிப்பவர்களும் நம்மிடையே இருந்துள்ளார்கள்.

நாகர் – இயக்கர் வரலாறு பற்றியெல்லாம் எமது பள்ளிப் பாடங்களில் அங்குமிங்குமாக ஒருசில தகவல்களை அறிந்திருப்போமேயொழிய அவை பற்றியும் எமக்குப் பெரிய தெளிவு நிலை அப்போது இருக்கவில்லை.

இதில் இன்னுமொரு சுவாரசியமான விடயமென்னவெனில், அக்காலங்களில் க.பொ.த (சாதாரணம்) வகுப்பிலேயே எமது உளவியலில் ஒரு பெரிய பிளவு ஏற்படுத்தப்பட்டு விடுவதுண்டு. “நீ விஞ்ஞானப் பிரிவிற்குள் நுழையப் போகிறாயா? இல்லை கலைப் பிரிவிற்குள் நுழையப் போகிறாயா?” என்ற கேள்வி எம்முன் பூதாகரமாக எழுந்து நிற்பதுண்டு. மொழி, கலை, இலக்கியம், அரசியல், சரித்திரம், வரலாறு என்ற பரப்புகளெல்லாம் கலைப்பிரிவிற்குள் அடங்கி விடும். சூழலில் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களைப் பொறுத்தவரை, இவை பற்றிய அறிவுத் தேடல்களோ, தெளிவுகளோ கிடைக்கின்ற வாய்ப்புகள் பெரும்பாலும் இருப்பதில்லை.

தமிழர் சமுதாயத்தைப் பொறுத்தவரை, தமது பிள்ளைகள் விஞ்ஞானப் பிரிவில் படித்துப் பட்டம் பெறுவது ஒரு மேலதிகமான கௌரவமிக்க சாதனையாக எண்ணினார்களேயொழிய கலைப்பிரிவினைப் பெரிய அளவில் அவர்கள் கவனமெடுக்கவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. ஏன் இப்போதும் இந்நிலை மாறிவிட்டதெனக் கூறுவதற்கில்லை. இதற்கான இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்துள்ளது.

தொழில் வாய்ப்பு என்று வரும் போதும் பொருளாதாரத்திற் பின்தங்கிய குடும்பச் சூழல் என்று வரும் போதும் அக்காலங்களில் பெற்றோர்கள் விஞ்ஞானப் பிரிவினையே முதன்மையான ஒரு “தப்புதற்கான தந்திரோபாயமாக (Escaping Strategy) மேற்கொள்ளும் ஒரு கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டார்களென்பதையும் நாம் புறக்ணித்துவிட முடியாது.

தனது பிள்ளை ஒரு வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ, கணக்காளராகவோ வரவேண்டுமெனப் பிரார்திக்கின்ற பெற்றோர்களையே அன்றைய காலகட்டத்தில் எம்முன் உலவினர் என்பது ஒரு உண்மையாகும்.

பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை என்பது எமது பெற்றோர்களையும், அவரது பிள்ளைகளையும் பொறுத்தவரையில் ஒரு சாதனைக் களமாகவே அப்போது இருந்து வந்தது.

எனினும் 1956இன் சிங்கள மொழித்திணிப்பு, பின்னர் 1970இன் ஆரம்பகாலங்களில் நிறைவேற்றப்பட்ட தரப்படுத்தல் என்ற இரண்டு சிங்களப் பௌத்த இனவெறிச் செயற்பாடுகளின் விளைவாகப் பலவித மாற்றங்களையும், அழுத்தங்களையும் அனுபவித்தமை பலரும் அறிந்ததே. தமிழர் தேச தேசிய உணர்வுகளை ஊற்றெடுத்துப் பாய வைத்த சமகால வரலாற்றின் மைந்தர்களாகவே இவற்றை எம்மால் காணமுடியும்.

எனக்கு நல்ல ஞாபமிருக்கிறது. அக்காலத்தில் க.பொ.த(உயர்தரம்)  வகுப்பிற் படிக்கும் ஒரு மாணவனையோ, மாணவியையோ ஒரு வயோதிபப் பாட்டனோ, பாட்டியோ கண்டவுடன் கேட்கும் கேள்விகளுள் ஒன்று நீர் “art’ ஓ “சயன்ஸ்“ ஓ என்பதாகும்.

எனவே மொழியறிவு, இலக்கிய அறிவு, பண்பாட்டு – வாழ்வியல் வரலாற்றறிவு கல்வி மட்டத்தில் ஒருவர் பெறுவதானால், அவர் கலைப்பிரிவு மாணவராக இருக்க வேண்டிய சூழலே அக்காலங்களில் இருந்து வந்ததெனக் கூறலாம்.

இதற்கு அப்பால் மொழியிலும், கலையிலும் இலக்கியத்தில் பண்பாடு, வாழ்வியல் வரலாற்றிலும் அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்களுள் பலர் தமிழர் தேசியப் பற்றுள்ளவர்களாகவும், ஆர்வலர்களாகவும் ஆற்றுகையாளர்களுமாகவே இருந்துள்ளனரென நான் அவதானித்து வந்துள்ளேன்.

நான் விஞ்ஞானக் கல்வியைத் தேர்வு செய்திருந்த போதும், எனது பாலப்பருவத்தின் ஈர்ப்புகள் ஆர்வங்கள், தொடர்புகள், ஆற்றல்கள், ஆளுமைகளின் வழி எனது முன்னோர் பற்றிய தேடலும், எமது தேச, தேசிய தெய்வ மரபுகள், தொன்மைகள் பற்றிய பிணைப்பும் என்னுள் ஒரு உயிரொளியாகவே சுடர்விட்டு வந்ததை என்னால் உணர முடிந்தது.

இதற்கு மேலாக எனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்புகள் – அனுபவங்கள் என்னை எமது தொல்குடி வரலாற்றோடு இறுகப் பிணைத்து வந்துள்ளதை ஒரு வரப்பிரசாதமாகவே நான் கருதுகிறேன்.

சிங்கள மொழித் திணிப்பு இனக் கலவரங்கள் தமிழ் மொழிக் கல்வி, தரப்படுத்தல் இவற்றினூடு பயணித்த அனுபவம் 1984இல் தமிழாராய்ச்சி மாநாட்டு இரவு வரை என்னுடன் தொடர்ந்து வந்துள்ளது.

1970 – 71களில் கொழும்பில் கற்ற போதும், கிளிநொச்சி – உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் ஓர் ஆசிரியனாகப் பணியாற்றிய போதும் நான் சிங்களப் பௌத்த இனவெறியின் அகோர முகங்களைச் சந்தித்தவன்.

குறிப்பாக கிறிநொச்சியிற் கல்வி கற்பித்த காலங்களிற்றான் ஆனையிறவுப் பாலத்தில் சிங்கள இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட சோதனைச் சாவடிகளை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பயணிகளுள் ஒருவனாக நான் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக இருந்து வந்தேன்.

நாம் பயணிக்கும் பேருந்துகள் மறிக்கப்பட்டு, இராணுவத்தினால் சோதிக்கப்படும் கணங்கள் ஒரு ஞானியையும், கொலைகாரனாக மாற்ற வல்லது. எமது பெண்கள், தாயார், தங்கையர், தமக்கையர் மற்றும் முதியோர் பட்ட இன்னல்களை நான் நேரிற் கண்டிருக்கிறேன்.

அக்கணங்களிலெல்லாம் நாம் இலங்கையின் பூர்வீகக் குடிகளா? இல்லை வந்தேறுகுடிகளா என்ற கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டேயிருந்தன.

தொடரும்..