தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 12 – புலவர் நல்லதம்பி சிவநாதன்

இலங்கைப் பாராளுமன்ற அரசியலமைப்பின் ஊடாக….

ஈழத்தமிழர்களின் தேச இறையாண்மைக்கும், தேசியப் பாதுகாப்பிற்குமான  ஒரு சனநாயகத் தீர்வு கிடைக்குமா?

1970களின் ஆரம்ப காலங்களில் இலங்கைத் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் இளைய சந்ததியினரின் இதயத்தில் எழுந்து ஒலித்த மிகவும் ஆழமான கேள்வி இதுவேயெனலாம்!

இலங்கைத்தீவிற்குள் வாழ்கின்ற தமிழர்களுக்கு இலங்கையின் பாராளுமன்ற அமைப்பினூடும் அதற்கான ‘தேர்தல்-வாக்கு’ வழிப்பட்ட பிரதிநிதித்துவத்தினூடும்  கிடைக்கப்போகின்ற இறுதித்தீர்வு ‘இனப்படுகொலையே’ என்ற முடிவிற்கு எமது இளைய சமுதாயம் தள்ளப்படுகின்ற அரசியல் சமூக பொருளாதாரச் சூழல் மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் விருத்தியடையத் தொடங்கிய காலப்பகுதி இதுவென்பதில் எதுவித ஐயப்பாடுமில்லை!

தமிழினத்தினை ஒட்டுமொத்தமாக ஓர் உரிமைகளற்ற, உயிர்பாதுகாப்பிற்கு எந்தவித உத்தரவாதமுமற்ற ஓர் ‘உயிர்க்கூடுகளின்’ சங்கமமாகவே பௌத்த சிங்களப் பெரும்பான்மையினம் கருதியும், கணித்தும், சிந்தித்தும்,  செயற்பட்டும் வருகிறது என்ற ஒரு அனுமானத்திற்கு எமது இளைய சந்ததி வரத் தொடங்கியதை எம்மால் நன்கு ஊகிக்கவும், உணரவும் கூடியதாகவிருந்ததெனலாம்!

இனவாத சக்திகளாக நாளுக்குநாள் விசுவரூபமெடுத்துவந்த சிங்களப் பௌத்த மதபீடங்களும், அரசியல்வாதிகளும் அவர்தம் அடியாட்களும், கைக்கூலிகளும் புரிந்துகொள்ளக்கூடிய – எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு மாற்று அரசியல் மொழியை, ஒரு முற்றிலும் மாறுபட்ட அரசியல் அணுகுமுறையை ஏற்று எதிர்கொள்ளவேண்டித் தானாக வேண்டுமென்ற ஒரு நிலைப்பாட்டினை எமது இளைய சந்ததியினர் எடுத்துவிட்டதற்கான அறிகுறிகள் மௌ்ள மௌ்ள வெளிப்படத் தொடங்கின!

இவ்வாறான ஒரு வரலாறுதான் சிங்கள மக்களிடையேயும் தலையெடுத்துத் தாண்டவமாடியதை நாமெல்லோரும் அறிந்திருந்தோம்! ‘சேகுவேரா இயக்கம்’ பற்றிய செய்திகளை நான் ஈண்டு விபரிக்க விரும்பவில்லை! ‘இரட்டை’ப் பிரதான முதன்மைக் கட்சிகளின் கையில் அகப்பட்டு உலக சனநாயக தத்துவம் அனுபவிக்கும் இடர்கள், இன்னல்கள் பற்றி யாமெல்லோரும் நன்கறிவோம்!

இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையில், அரசியற் தலைமைகளும், அரசியல்வாதிகளும், அவர்தம் கட்சியமைப்புகளும் கனவிலும் கண்டிராத புதியதொரு அரசியல் மொழியும், அதற்கான அணுகுமுறையும் இலங்கை அரசியலுக்குள் அடியெடுத்து வைப்பதற்கான பாதையையும், பயணத்தையும், அவற்றிற்கான தேவையையும், தெளிவினையும் முன்னின்று எடுத்துக்கொடுத்த பெருமையும் பேறும்…

இனவாத சிங்களப் பௌத்த அரசியலமைப்புகளையும், மதபீடங்களையும் ஊடக அமைப்புகளையும் அவற்றின வழிகாட்டலில் தொடர்ச்சியான இனக் கலவரங்களையும், உயிர்ப்பலிகளையும், உடைமைகள் அழிப்புகள், எரிப்புகளையும், மானபங்கங்களையும் நிகழ்த்தி, நிறைவேற்றி அதில் ஆனந்தக் களிப்பும்,  ஆர்ப்பரிப்பும் ஈட்டிய அனைத்துச் சிங்கள மக்களையுமே சாருமெனலாம்! இந்த இனக்கவர காலங்களில் இதனை நிறுத்துகின்ற முயற்சிகளில் சிங்கள மக்கள் உணர்வு பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் ஈடுபட்டிருந்தால் –  அதன்வழி இயங்கியிருந்தால் உண்மையான புத்தசமய போதனைகளைப் பின்பற்றியிருந்தால், இலங்கையில் எல்லா இனங்களும் ஒன்றாகச் சகோரத்துவப் பண்புகளோடு வாழக் கூடிய சூழல் எப்போதோ ஏற்பட்டிருக்க முடியுமென்பதை மறுப்பதற்கில்லை! ஆனால் உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டேயிருந்து வந்துள்ளது!

இதன்விளைவாக…

திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கெதிராகச் சமநீதியென்றும், ‘சமஸ்டி’ அமைப்பென்றும், சத்தியாக்கிரகமென்றும், அறவழிப் போராட்டமென்றும், கூப்பாடு போட்டும் கூக்குரலெழுப்பியும் வந்த இலங்கைத்தமிழர்கள் தம்மை ஈழத்தமிழர்களாக மீளுருவாக்கம் செய்யத் தலைப்பட்ட வரலாறு தோற்றம் பெற்றது! அகிம்சையென்றும் அறமென்றும் வரம்புகள் கட்டிய தமிழர் அரசியல் வரலாற்றின் தலையெழுத்தில் ‘ஆயுத எழுத்து’ வந்து அமர்ந்து கொண்டது! தமிழர்கள் காலங்காலமாக நம்பித் தொழுத ஆண்டவனின் கையில் வைத்திருந்த ஆயுதம் ஈழத்தமிழர் கரங்களிற்கு வந்திறங்கியது! புறநானூற்றிலும், பரணிப்பாட்டிலும் அறத்தையும், மறத்தையும் அழகுபடுத்திய பண்டைத்தமிழர் வரலாறு நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், கடற்துறைகளிலும்,  வயற்புறங்களிலும் தரையிறங்கின!

‘அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்;மறத்திற்கும் அஃதே துணை’ எனும் குறள் உயிர்பெற்று உலாவரத்தொடங்கியது!

தாய்மீதும், தாரத்தின் மீதும், தமக்கைமீதும், தங்கைமீதும், சேய்மீதும், சிறுவர்மீதும் கொண்டிருந்த பாசமும் பற்றும் தாயகத்தின்மீதும், தன்னினத்தின் மீதும் தாவிக்கொள்ள பாய்கின்ற தமிழர்களின் காவியம் ஆரம்பமாயிற்று!

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதிலலையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்’ எனும் பாரதியின் உயிரொலி ஊரொலியாயிற்று!

கல்வியும், கலையும், செல்வமும், சிறப்பும் பட்டமும், பதவியும், உத்தியோகமும் தன்மானத்தின் முன்னே, இனமானத்தின்முன்னே துச்சமென எண்ணும் ஓர் இளைய தமிழ்ச் சமுதாயம் தலையெடுக்கலாயிற்று!

குட்டக்குட்டக் குனிவதும், எட்டியுதைக்கவும், ஏளனஞ் செய்யவும், திட்டித்துரத்தவும் வெட்கமின்றி வீழந்துகிடக்கின்ற கெட்ட சமுதாயத்தைத் தட்டியெழுப்புவோமெனத் திட்டங்கள் தீட்டப்பெற்றன! அவற்றிற்கான அரங்குகள் கட்டப்பட்டன!

உளவியல் ரீதியாகப் பார்க்கப்போனால், ஒரு சர்வதிகார அமைப்பின்கீழ் ஓர் இராணுவ ஆட்சியின் கீழ் அதிகார வர்க்கத்தின் ஆக்கிரமிப்பு அடக்குமுறையின் பிடியில் அச்சம் பீதியில் வாழ்கின்ற குடிமக்கள் தங்களுக்கு முன்னால் தோற்றமளிக்கின்ற அந்தத் தோற்றப்பாட்டை எப்படியாவது விலக்கிவிடவேண்டுமென்று துடிப்போடும், தவிப்போடும் முயல்வதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாதென்ற யதார்த்த உண்மையையே ஈழத்தமிழினம் அன்று நேரிற் சந்தித்ததெனவே எண்ண வேண்டியுள்ளது!

ஒருமுறை என்னோடு ஒரு ‘சான்றாண்மை’ மிக்க பெரியவர் பேசிக் கொண்டிருந்த போது கூறிய விடயம் இன்றும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது!

‘தம்பி! நாங்களும் ஒருகாலத்தில் எங்கள் முன்னால் நின்று எம்மைக் கொடுமைப்படுத்தி, அவமானப்படுத்திய இனவெறியர்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தவர்கள் தானே தம்பி! ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், நாம் மனதிற்குள் ஆயுதம் தாங்கி எமது பகைவர்களைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டு எமது வஞ்சினங்களைத் தீர்த்துக் கொண்டிருந்தோம்! இன்றோ தமிழர்கள் உண்மையாகவே ஆயுதத்தைக் கையிலேந்திச் சுடத்தொடங்கியிருக்கிறார்கள்! நாங்கள் படு கோழைகளாக இருந்தோம்! புத்தகப் புறநானூற்றுப் பக்தர்களாக இருந்தோம்! ஆனால் அவர்களோ வாழ்வா? சாவா? என்ற வரலாற்றின் பக்கங்களை எழுதத் துணிந்து விட்டார்கள்!’ என்ற தொனிப்பட அந்தப்பெரியவர் கூறிவிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்!

அவருடைய புன்னகையைப் பார்த்திருந்த எனது மனத்திரையில் நான் தமிழாராய்ச்சி மாநாட்டின் பத்தாவது நாளிரவு துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்த ‘கலவர எதிர்ப்புப் படையணி’யினரின் முன்னால் அஞ்சி நடுங்கி நின்ற காட்சியும், எனது உருத்திரபுரம் கிளிநொச்சி ஆசிரிய அனுபவ காலங்களில் ஆனையிறவை ஒவ்வொரு நாளும் கடக்க நேர்ந்தபோது சிங்கள இராணுவச் சிப்பாய்கள் எம்மை நிறுத்திச் சோதனை செய்து துன்புறுத்திய வேளைகளிலும் கொழும்பு யாழ்ப்பாண இரயிற் பயணங்களின்போதும் நாம் அனுபவித்த அவமானங்களும், அருவருப்புகளும் ஒவ்வொன்றாக ஓடிக்கொண்டிருந்தன!

அந்தப் பெரியவர் சொன்னதிற்றான் எத்தனை உண்மைகள் என அப்போது நான் எண்ணிக்கொண்டேன்!

இலங்கைத் தீவினில்  சனநாயகம் எனும் போர்வையில் நாம் அனுபவித்த துன்பங்களை, இன்னல்களை, உயிரிழப்புகளை, பட்ட அவமானங்களை, அலங்கோலங்களை, அதிருப்திகளை அறியவும், அணுகவும், எம்மை எட்டிப் பார்க்கவும் எவரும் முனையவுமில்லை! முயலவும் இல்லை!

சீனாவிலும் ருசியாவிலும் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்களைப் பற்றியும் அங்கிருந்து விரிந்து செழித்த மானிட உரிமைக் குரலுக்கான இலக்கிய வீச்சுக்களைப் பற்றியும் அரங்குகளிலும், இதழ்களிலும் பொரிந்து தள்ளியவர்கள், சொரிந்து தள்ளியவர்கள் எல்லாம் சிங்களப் பௌத்த இனவாதத்தினைத் தடுப்பதற்கு வலுவற்றவர்களாகவும், வக்கற்றவர்களாகவுமே அரசியற் பிழைப்பு நடத்தி வந்தனர்!

உலக சனநாயகமும் எம்மைப்பொறுத்தவரை ஊமையாகி நின்றது!

டொனமூர் – சோல்பரித் திட்டங்களும், கண்டி கறுவாத்தோட்ட அரசியலும் தமிழரிடை மலிந்து கிடந்த வடமாகாண கிழக்கு மாகாணப் பிளவுகளும், சாதி சமயப் பிரிவுகளும் அவை சார்ந்த பிணிகளும் ஒன்றுசேர நின்று தமிழுக்கும், தமிழருக்குமான சுபீட்சத்தையும், சுயநிர்ணய உரிமைகளையும், வரலாற்று இறையாண்மையையும் அழிக்க நின்ற சிங்களப் பௌத்த இனவாத அரசியலுக்கு உரமாக அமைந்தன!

இப்பின்னணியிற்றான் இலங்கைத்தீவில் தமிழுக்கும், ஈழத்தமிழருக்குமான ஒரு தமிழ்த்தேசியம் தளிர்த்துக் கரங்களில் ஆயுதத்துடன் தன்னைக் களமிறக்கியது எனலாம்!

இந்நிலையிற்றான் இளைய தமிழர்களின் பிரிவினைக் கொள்கையை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்றும், தமக்கான ஒரு தாயக தேசத்தை நோக்கிய ஒரு மாற்று அரசியற் பாதையை நம்பிக்கையோடு தளமிட்டு ஒரு தாயக விடுதலைப் போராட்டப் பயணத்தையும், அதற்கான வியூகங்களையும் வகுத்துள்ளார்கள் என்றும் கூறிய   செய்திகள் மௌ்ள மௌ்ள இலங்கையின் எல்லாப் பாகங்களுக்கும் மட்டுமன்றித் தாயத் தமிழகத்திற்கும் கசியத் தொடங்கிற்று!

தமிழர்கள் இனியும் தாம் இயற்றும் தாங்கொணாக் கொடுமைகளை, தாழ்வுகளை, தரக்கேடுகளை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் தம்மைச் சகிக்கமாட்டார்கள் என்ற சத்திய உண்மையைச் சிங்கள தேசமும், அதன் தீயசக்திகளும் இப்போதுதான் தரிசிக்கத் தொடங்கின!

இப்போதும் நான் கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் எனது ஆசிரியக் கடமைகளைப் புரிந்துகொண்டும் கவிதை கலை இலக்கியப் பணிகளை ஆற்றிக் கொண்டும் நாட்டு நிலைமைகளை அவதானித்துக் கொண்டும் இருந்தேன்!

இவ்வேளைதான் இலண்டனிலிருந்து பொறியியற் பட்டப்படிப்புக்கான அழைப்பு எனது  சின்னண்ணாவிடமிருந்து வந்தது!

எனது பத்தொன்பது வயதில் என்னை ஆற்றொணாத் துயரில் ஆழ்த்திவிட்டு அமரத்துவமடைந்த என் தெய்வத்தாய் கூறிய ஒரேயொரு காரணத்தை முன்னிட்டு நான் மேற்படிப்பினை நோக்கி வெளிநாடு செல்ல ஆயத்தமானேன்!

தொடரும்….