தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது!

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவோ, அதிகாரப்பகிர்வு சம்பந்தமாகவோ ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவோ உத்தியோகபூர்வமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலைமையானது வடக்கு, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகும் என்று அரசியல் ஆய்வாளரான தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தமிழ்த் தலைவர்கள் பல தருணங்களில் இந்தியாவின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றாது பல்வேறு சந்தர்ப்பங்களை கைவிட்டு வரலாற்றுத் தவறிழைத்ததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.

‘1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும் 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன’.’இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையில் செயற்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற தருணத்தில் பிரதமர் மோடியின் வருகை நிகழ்ந்துள்ளதுடன் அது அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றிருக்கின்றது.

அதேபோன்று ராஜீவ் காந்தியின் வருகையானது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்தியதாக இருந்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் பூர்வீகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாகவே இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிரதமர் மோடியின் விஜயமானது, ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளர்.