தமிழக ஆளுநர் இந்தியப் பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்தார்

தமிழக ஆளுநர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு தில்லி சென்று பிரதமர் மோடி அவர்களை சந்தித்துப் பேசினார்.

இன்று காலை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தில்லி சென்றார். வரும் வெள்ளிக்கிழமை வரையில் அவர் தில்லியில் தங்கியிருப்பார். அப்போது குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இன்று தமிழக ஆளுநர், பிரதமர் மோடி அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழக அரசியல் நிலவரம், கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் மீது நேற்றைய தினம்(03) விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அவர்களின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டு ஆண்டுகளாகியும் முடிவெடுக்காமல் இருப்பது அதிருப்தியை அளிக்கின்றது என்று கூறியிருந்தது.

ஆளுநர் தில்லியில் தங்கியிருக்கும் சமயம் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துப் பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.