தனது சிங்கள பௌத்த அரசு 8 மாகாணசபைகளையும் கைப்பற்றும் என்கிறார் வியாழேந்திரன்

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற நிலை தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள், தொழில் அபிவிருத்தி,வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் 08 மாகாணசபைகளை ஆளும் கட்சி கைப்பற்றும் எனவும் சிலவேளைகளில் ஒன்பது மாகாணசபைகளையும் அரசாங்கமே கைப்பற்றும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று மாலை ஜனாதிபதியின் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமிய வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வீச்சுக்கல்முனை –சேத்துக்குடா வீதி இன்று மாலை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இரண்டு மில்லியன் ரூபா செலவில் இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அ.அசோக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தபால் சேவைகள், தொழில் அபிவிருத்தி, வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அரசுக்காலத்தில் எந்த பாரிய அபிவிருத்தியையும் நாங்கள் எதிர்பார்க்கமுடியவில்லை.தற்போதைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தெருக்கள், பாலங்கள் போன்ற பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.அதன் பின்னர் வந்த ஐக்கிய தேசிய கட்சியினால் எதிர்பார்த்த எந்தவேலைத்திட்டங்களும் நடைபெறவில்லை.

தற்போதுள்ள அரசாங்கம் ஒரு உறுதியாக அரசாங்கம்.மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை நெருங்கியிருக்கின்ற ஒரு பலமாக அரசாங்கம்.இந்த பலம்பொருந்திய அரசாங்கத்தில் இந்த மாகாணத்தில் ஒரு அமைச்சராக நாடுமுழுதும் சேவையாற்றும் வாய்ப்பு இந்த அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் ஒருபோதும் வீணடித்துவிடமுடியாது.இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தி எமது மாவட்டத்திற்கு,மாகாணத்திற்கு அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச நன்மைகளைப்பெற்றுக்கொள்ளக்கூடிய அதியுட்ச நன்மைகளை நாங்கள் பெற்றுக்கொடுத்தேயாக வேண்டும். அதுதான் மக்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்த மாகாணத்தில் மக்களின் இருப்பினை பாதுகாப்பதற்காக வாக்களித்த அந்த மக்களை நாங்கள் ஓருபோதும் மறந்துவிடமுடியாது.அந்த மக்களினால் இந்த மாவட்டமும் மாகாணமும் நன்மைபெறயிருக்கின்றது.

தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அரசாங்கம் ஓரு விடயத்தினை சொல்வதற்கு முன்பாகவே ஒரு விடயத்தினை முன்மொழிய முன்பாகவே, ஒரு விடயத்தினை செயற்படுத்துவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சியினர் பல்வேறுபட்ட கதைகளை திரிவுபடுத்தி மக்கள் மத்தியில் பிழையான கருத்துகளை கொண்டுசேர்ப்பதை பார்க்கமுடிகின்றது.எமது மக்கள் இதுகுறித்து எந்தவிதமான குழப்பமும் அடையத்தேவையில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களை பாதுகாக்ககூடிய,சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத,அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடிய முன்மொழிவுகளை இந்த அரசாங்கம் முன்வைக்கும்.அதற்காக இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் நன்மைக்காக உழைக்கத்தயாராகயிருக்கின்றோம்.

கடந்த காலத்தில் தற்போதுள்ள எதிர்க்கட்சியுடன் இணைந்துகொண்டு தங்களது அரசியல் நாடகத்தினை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் அரங்கேற்றிய அதே தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் கட்சிகள் இன்று அதே நாடகத்தினை கையிலெடுத்துள்ளனர்.இதனை மக்கள் நன்றாக புரிவார்கள்.

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நாங்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற தேர்தல் களத்தில் நாங்கள் முன்வைத்த மக்கள் எதிர்பார்ப்பு கள அரசியல் என்ற தொனிப்பொருளுக்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.அந்த அங்கீகாரத்தினை சரியாக நாங்கள் மக்களுக்கு பயன்படுத்தி நாங்கள் சேவைசெய்யவேண்டும்.

தேர்தல் காலங்களில் நாங்கள் கூறியவை அனைத்தும் நடைபெற்றுள்ளது. இனி மாகாணசபை வரவிருக்கின்றது. இலங்கையில் ஒன்பது மாகாணசபை இருக்கின்றது. இதில் எட்டு மாகாணசபைகளை அரசாங்கம் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.சிலவேளைகளில் ஒன்பதையும் கைப்பற்றமுடியும்.

ஓரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்று கூறிய நிலையின்று தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பினை நம்பி கடந்த காலத்தில் வாக்களித்த மக்களுக்கு உரிமையும் இல்லை,தீர்வும் இல்லை,அபிவிருத்தியும் இல்லை. இனிமேல் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற நினைத்தாலும் மக்கள் ஏமாறுவதற்கு தயார் இல்லை. அவர்கள் தயார் இல்லையென்பதை அண்மைய தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களை ஏமாற்றவேண்டும் என்று நினைத்த பலர் அரசியலில் இருந்தே காணாமல்போயிவிட்டனர்.கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் அரசியலே இல்லையென்று சிலர் கூறினர்.இன்று அவர்களே இல்லாமல்போயிவிட்டனர்.நாங்கள் கட்சிமாறினால் காணாமல்போயிவடுவார்கள் என்று கூறியவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல்போயிவிட்டார்கள்.

இதனிடையே, அபிவிருத்தியை முன்நிறுத்தி தமிழ் மக்களை ஏமாற்றி எதிர்வரும் மாகாணசபை தோதலில் அதிக வாக்குகளை பெற சிறீலங்கா அரசும் அதனுடன் இணைந்து இயங்கும் தமிழ் குழுக்களும் முயன்றுவருவதையே இந்த உரை எடுத்துக்காட்டுவதாகவும் இதனை முறியடிப்பதற்கு தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்களும் அரசியல்வாதிகளும் தற்போதே தமது பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் மக்களை ஒன்று திரட்ட வேண்டும் எனவும் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.