தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நிலைக்கு முடிவுகட்டுங்கள் – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் பொறுப்புக்கூறல் செயல்முறையை வலுப்படுத்தவும், தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைகளுக்கு முடிவு கட்டவும் தீவிரமான நடவடிக்கைகளை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில், ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரால் இலங்கை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மீதான உரையாடலிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம் கொள்கிறது. 2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கான அனுசரணையை இலங்கை அரசாங்கம் விலக்கிக் கொண்டமை கவலைக்குரியது.

இந்த பிரேரணையின் ஊடாக இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகம், நட்டஈட்டு அலுவலகம் போன்ற முன்னேற்றங்களில் ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலைக் கொள்கிறது. பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளகப்பொறிமுறை ஊடாக எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இந்த விடயங்களில் செய்யக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி குறிப்பிட்டார்.