காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், தமது உறவுகளை தேடி பல ஆண்டுகளாகப் போராடி வரும் தமிழ் தாய்மார்களின் குரலை சர்வதேச அளவில் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதிநிதிகள், இறுதிப் போரின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும் தமது பிள்ளைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையிலும், இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நாள் முதல் அவர்களைத் தேடி வீதிகளில் போராடிய தமிழ் தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தை உருவாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
2017ஆம் ஆண்டு முதல் வடக்கு – கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இந்தப் போராட்டங்களின் மூலம், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே உள்ளனர்? கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை தமக்கு இல்லை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்



