டீல் காரர்களுடன் எமது பயணத்தை மேற்கொள்ள முடியாது; சஜித்

புதிய கூட்டணி அமைத்துக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றி கொள்வோம். அதற்குத் தலைமைத்துவம் வழங்க நான் தயாராக இருக்கிறேன். அனைவரையும் இணைத்துக்கொண்டே எமது பயணம் அமையவேண்டும். ஒற்றுமையே எமது பலம். அது பெயரளவில் இருக்க முடியாது. டீல் காரர்களுடன் எமது பயணத்தை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

உள்ளூராட்சி மனற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை சஜித் பிரேமதாஸ கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் சந்தித்தார். இதில் உரையாற்றும்போதே அவர்
இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் அடைந்த பின்னடைவால் நாம் ஒருபோதும் சோர்வடையக் கூடாது. பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலேயே நான் ஜனாதிபதி வேட்பாளரானேன். என்றாலும் எனது வேலைத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு 55 இலட்சம் மக்கள் எமக்கு வாக்களித்தனர். அவர்களை யாரும் கைவிட்டு விட டியாது.  அதேபோன்று பல்வேறு பொய்ப்பிரசாரங்களைக் கண்டு எமக்கெதிராக வாக்களித்த மக்கள் தற்போது உண்மையை உணரத் தொடங்கியுள்ளனர். அதனால் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு, பொதுத் தேர்தலை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.

அனைத்து முற்போக்கு சக்திகளையும் கூட்டிணைத்துக் கொண்டு புதிய கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடைவோம். அதற்காகக் கிராம மட்டத்திலிருந்து நீங்கள் சக்தி பெறவேண்டும். பொதுத் தேர்தலில் புதிய மாற்றுத் திட்டத்தை ஏற்படுத்த நாம் தயார்.

அதற்காக யாரையும் ஒதுக்கமாட்டோம். அனைவரையும் இணைத்துக் கொண்டே செல்லவேண்டும். புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கநான் தயார். ஒற்றுமையே எமது பலம். ஒற்றுமை பெயரளவில் இருக்க முடியாது. அதேபோன்று எமது எதிர்த்தரப்புடன் டீல் போட்டுக் கொண்டு செயற்படுபவர்களுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாது. டீல் அரசியல் கட்சிக்கும் நல்லதில்லை. நாட்டுக்கும் நல்லதில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்துக்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றிருந்தேன். அதேபோல நன்றி செலுத்த தற்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் செல்லும் கிராமங்களில் மக்கள் புதிய இலக்கை நோக்கி செல்லத் தயாராகவே இருக்கிறார்கள். அதற்காக விட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு வருமாறே எம்மிடம் சொல்கிறார்கள்.

புதிய அரசு பதவியேற்றதும் எமது தரப்பினர் அரசியல் பழிவாங்கலிற்கு உள்ளாகி வருகிறார்கள். பலர் தொழிலை இழந்துள்ளனர். சிலர் தூரப் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதும், அரசியல் பழிவாங்கலுக்கு இலக்கானவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதே எமது முதற்பணியாக இருக்கும்.

ஐ.தே.க மற்றும் கூட்டணியின் ஒற்றுமை அதன் உறுப்பினர்களுக்குப் பயனுள்ள முடிவுகளைக் கொண்டு வர வேண்டும். அரசியல் எதிரிகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து இந்த கூட்டணி விடுபடவேண்டும். மேலும், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கட்சி மற்றும் அரசுக்கு வரும் போது முடிவெடுக்கும் பணியில் பங்கேற்க அனுமதிக்கப்படும் ஒரு வழிமுறை இருக்கவேண்டும்.

நல்ல தகவல்கள் அடிமட்ட மட்டத்திலிருந்து மேலே செல்கின்றன. எனவே ஒரு பயனுள்ள தகவல்பாயும் முறை இருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐ.தே.கவோ, கூட்டணியோ யாருடனும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஒரு பெளத்த தேசம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதில் விவாதம் இல்லை. ஆனால்”எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கட்டும்’என்று கற்பிக்கும் புத்தரின் பிரசங்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். பெளத்தம் முன்னுரிமையளிக்கப் பட்டாலும், ஏனைய மதங்கள் தமக்கான சுதந்திரத்துடன் செயற்படும்.

கட்சி அல்லது புதிய கூட்டணி ஒரு தனிநபரின் சொத்தாக மாறக்கூடாது, மாறாக அவர்களைஆதரிக்கும் அனைவருக்கும் ஒரு சொத்தாக மாற வேண்டும்” என்றார்.