ஜனாஸா விவகாரத்தை அரசியல் ரீதியில் அணுகுவதை அரசு கைவிடவேண்டும் – அநுரகுமார

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்கள் விவகாரத்தை அரசாங்கம் அரசியல் ரீதியில் அணுகாமல் விஞ்ஞான சுகாதார தொழில்நுட்ப ரீதியில் அணுக வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற பிரசைகள், கொவிட் பெருந்தொற்று காரணமாக இறக்கும்பட்சத்தில் அவர்களின் உடல்களை (ஜனாசாக்களை) தகனம்செய்தல் பற்றி அவர்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 20 நாட்களுடைய ஒரு பச்சிளங் குழந்தை தகனம் செய்யப்பட்டதும் இந்த நிலைமை உச்சகட்டத்தை அடைந்தது. இன்றளவில் இந்த உரையாடலில் இரண்டு பக்கங்கள் உள்ளன. தொழில்நுட்ப, விஞ்ஞானரீதியான, சுகாதாரரீதியான அணுகுமுறை ஒரு புறத்தில். அரசியல் அணுகுமுறை மறுபுறத்தில்.

இத்தகைய கூருணர்வுமிக்க சிக்கலுக்கான சரியான அணுகுமுறையாக அமைவது விஞ்ஞானரீதியான, தொழில்நுட்பரீதியான, சுகாதாரரீதியான அணுகுமுறையாகும். ஆனால் அரசாங்கம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விதைத்த உன்மத்தமான இனவாத அணுகுமுறை காரணமாக இன்றளவில் விஞ்ஞானரீதியான, தொழில்நுட்பரீதியான, சுகாதாரரீதியான அணுகுமுறையைப் பார்க்கிலும் அரசியல் அணுகுமுறை பலம்பொருந்தியதாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த சடலங்கள் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது அரசியல் இயக்கமோ அரசியல்வாதிகளோ அல்ல. ஒரு வருடத்திற்கு கிட்டிய காலமாக இலங்கைகயில் இந்த வைரஸ் பற்றிய கற்றாராய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க விஞ்ஞானரீதியான தகவல்கள் இருக்கின்றன.

முழு உலகுமே ஏற்றுக்கொண்ட வைரஸ் தொடர்பான பேராசிரியரான மலிக் பீரிஸ் அவர்கள், அடக்கம் செய்வதால் இது பரவுதல் பற்றிய மிகவும் விஞ்ஞானரீதியான அபிப்பிராயமொன்றை முன்வைத்துள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் தொற்றுநோய் பற்றிய பிரதான நிபுணத்துவ மருத்துவராக பணியாற்றிய விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க அவர்களும் இது பற்றிய அபிப்பிராயமொன்றை முன்வைத்திருந்தார்.

அடக்கம் ஊடாக இந்த வைரஸ் பரவுதல் சம்பந்தமான தாக்கம் ஏற்படுவதில்லை என்பதை விஞ்ஞானரீதியாக தெளிவுபடுத்தி இருந்தார். அவர்கள் இருவரினதும் அபிப்பிராங்கள் போதுமானவையாக இல்லாவிட்டால் அரசாங்கம் மேலும் அது பற்றிய அபிப்பிராயங்களை விசாரித்தறியலாம்.

ஆனால் இதற்குள்ளேயும் அரசியலை மேற்கொள்கின்ற அரசாங்கம் ஒரு மக்கட்பிரிவுக்கு கூருணர்வுமிக்கதாக தாக்கமேற்படுத்துகின்ற பிரச்சினைகளைக்கூட பிரயோகித்து வருகின்றது. இந்த அரசியல் கோணத்தில் அளப்பதை அரசாங்கம் கைவிடல் வேண்டும்.

தகனமா? அடக்கமா ? என்பதை தமது அரசியல் போராட்டக் களத்தில் அங்குமிங்கும் வீசியெறிகின்ற பந்தாக மாற்றிக் கொள்ளக் கூடாது. வறண்ட நிலப்பகுதியைத் தேடிக்கொண்டு அடக்கம் செய்தல், மாலைதீவுக்கு கொண்டுசென்று அடக்கம்செய்தல் போன்ற விடயங்கள் பற்றிய செய்திகள் பிரசுரமாகின்றன. முழுஉலகுமே ஏற்றுக்கொண்ட வைரஸ் நிபுணர்களின் விடய முன்வைத்தல்களுக்கிணங்க அரசாங்கம் செயலாற்ற வேண்டும்.

அரசியல் பற்றிய அரசாங்கத்தின் அணுகுமுறையை உடனடியாக கைவிடல் வேண்டும். விஞ்ஞானரீதியான, தொழில்நுட்பரீதியான, சுகாதாரரீதியான அணுகுமுறை மூலமாக பதில் வழங்க வேண்டும்.

நீதி அமைச்சர் திரு. அலி சப்றி இந்த பிரச்சினை எந்த முனையில் முடிவுக்கு வரஇயலுமென்ற அபாயம் நிலவுவதாக சனாதிபதியவர்களின் நெருக்கமானவராக செயலாற்றிக்கொண்டு கூறியுள்ளார். எனவே இந்த பிரச்சினைக்கு விஞ்ஞானரீதியான பதிலை உடனடியாக வழங்க வேண்டும்.”