ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்த தடை இல்லை – பொலிஸாரின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி 8 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு இடையுறு இல்லாமல், சட்டத்துக்கு உட்பட்ட வகையில் எதிா்ப்பைத் தெரிவிப்பதற்கான உரிமை அலத்களுக்கு இருப்பதாக நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணம் வருகின்றார். யாழில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கியிருக்கும் அவர், வடக்கின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் 8 பேருக்குத் தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனா். இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்றில் இன்று முன்வைக்குமாறு நீதிமன்றம் பிரதி வாதிகளுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராகத் தடை கட்டளை கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.