சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன்

2025ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான ஆண்டாகவும், அதே வேளை சொல்லொணா இயற்கைப் பேரிடர்களால் நாடு சோதைக்குள்ளாகியுள்ளதொரு காலப் பகுதி யாகவும் வரலாற்றுத் தடத்தில் பதிவாகியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது அதிகாரத்தை பேரனர்த்த நிவாரணங்களை பயன்படுத்தியேனும் அடிமட்டம் வரை கொண்டு செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கும் மூன்றாந்தர அரசியல் கலாசாரம் அரங்கேறிவருகின்ற அதே வேளை, தமிழ் மக்களின் நீண்டகால அபிலா ஷைகள், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் இவ்வருடம் முழுவதும் கனவுகளாக நாட்கள் கடந்தோடும் காலமாகவே தான் அமைந்துள்ளன.
அரசியல் களத்தைப் பொறுத்தமட்டில், மே 6, 2025 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் 43.26சதவீதமான வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 339 உள்ளுரா ட்சி சபைகளில் 265 சபைகளைக் கைப்பற்றி தனது பலத்தை நிலைநிறுத்தியது.
இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் நிலவிய பிளவுகளுக்கு மத்தியிலும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தன.  குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி 35 சபைகளைக் கைப்பற்றி தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரில் தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக ‘சங்கு’ சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது பங்கிற்கு வெற்றி களைத் தக்க வைத்துக்கொண்டது.
இருப்பினும் ஆட்சியமைப்பதில் தமிழர சுக் கட்சி யின் விட்டுக்கொடுக்காத தன்மையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஜன நாயக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டிணைவு பத்து உள்ளுராட்சி மன்றங்கள் வரையில் தமதாக்கிக் கொண்டன. இந்தக் கூட்டிணைவ கொள்கை அடிப்படையில் அமை வதாகவே காண்பிக்கப்பட்டு உடன்பாடும் செய்யப்பட்டது. குறித்த கொள்கைக் கூட்டில் சந்திரகுமார் தலைமையிலான சமவத்துக் கட்சியும் இணைந்து கொண்டிருந்தது.
எனினும் சொற்ப காலத்தில் ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியானது 13ஆவது திருத் தச்சட்டத்தினை வலியுறுத்தி செயற்பாடுகளை ஆரம்பித்தமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன் னணி முரண்பட்டது. ஈற்றில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழரசுக்கட்சியுடன் மீண்டும் கைகோர்க்கும் நிலையை அடைந்துள்ளது. இதற் குப் பின்னால் சுமந்திரனின் முதலமைச்சர் கனவும் காணப்படுகின்றது என்பது தனிக்கதை.
அதேநேரம், மலையக அரசியலில், பாரம் பரியமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான பின்ன டைவைச் சந்தித்த நிலையில், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஓரளவு தம்மை தக்க வைக்கும் நிலைக்குச் சென் றிருந்தன.
குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 1,700 ரூபா நாளாந்த அடிப்படைச் சம்பளம், ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின் கிடைத்த சமூக நீதியாகவும், அரசாங்கத்தின் முக்கிய தீர்மானத்தின் பிராகரம் எடுக்கப்பட்ட செயற் பாடாகவும் பார்க்கப்படுகிறது.
தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் கறுப்பு அத்தி யாயமாக அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது, குழந்தைகள்  உள்ளிட்ட 240 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை சர்வதேச அளவில் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், போர்க்கால மீறல்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் உலக அரங்கிற்கு கொண்டு வந்திருந்ததோடு பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் வெகுவாகவே வலியுறுத்தியுள் ளது.
இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 6, 2025 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் 60ஃ1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. இத்தீர்மானம் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்கும் சர்வதேச பொறிமுறையை 2027வரை நீட்டித்துள்ளது.
அரசாங்கம் இந்தத் தீர்மானத்தினை ‘வெளிநாட்டுத் தலையீடு’ என்று ஆரம்பத்தில் விமர்சித்தாலும், சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிய வேண்டிய கட்டாயத்தில், நவம்பர் மாதம் வடக்கு-கிழக்கில் இராணுவக் கட்டுப் பாட்டிலிருந்த சுமார் 5,000 ஏக்கர் பொதுமக்களின் காணி விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக் கைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்தது. ஆனால் தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியது.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் 2025ஆம் ஆண்டு ‘அனைத்து நாடுகளுடனும் நட்பு’ என்ற கொள்கையின் கீழ் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க விஜயங்களைக் கண்டது. குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் 4 முதல் 6 வரையிலான காலப்பகுதியிலர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் முக்கியமானது. இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே மன்னார் முதல் தமிழ்நாடு வரையிலான கடல்வழி மின்சார இணைப்பு, திருகோணமலை எரிசக்தி மையம் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க ‘UPI’ பணப்பரிமாற்ற முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின.
அத்துடன் மலையகத்தில் மேலும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மே மாதம் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மியும், ஜூன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கும் மற்றும் நவம்பர் மாதம் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூவும் இலங்கைக்கு வருகை தந்து, நாட்டின் மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.
மறுபுறம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025இல் சீனா (ஜனவரி), வியட்நாம் (மே), ஜேர்மனி (ஜூன்) மற்றும் ஜப்பான் (செப்டெம்பர்) நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார். செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விளக் கமளித்தார். ஆனால் குறித்த சந்தித்து உத்தியோக பூர்வ இருதரப்பு சந்திப்பாக நடைபெற்றிருக்க வில்லை.
பொருளாதார ரீதியாக, செப்டெம்பரில் ஜப்பான் மற்றும் சீனாவின் நிதியுதவியுடன் நிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ் சாலைப் பணிகள் (கடவத்தை – மீரிகம) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதோடு  அரசாங்கத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு கெடுபிடிகள், கடந்த கால ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் போன்றவை நிர்வாக ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
குறிப்பாக ‘மிஸ்டர் கிளீன்’ என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுப் பயண மொன்றுக்காக பயன்படுத்திய நிதி தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது கொழும்பு வாழ் மேல்தட்டு வர்க்கத்துக்கு பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
ஆண்டின் இறுதியில், நவம்பர் 28 அன்று இலங்கையின் கிழக்குக் கரையைத் தாக்கி, பின்னர் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ‘தித்வா’ சூறாவளி ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை உள்நட்டில் உருவாக்கியுள்ளது. இச்சூறாவளியால் நாடு முழுவதும் சுமார் 640க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1.6மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கிராமங் களையே துடைத்தெறிந்திருக்கின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், இந்தியாவின் ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். புயலின் பாதிப்புகள் தணியாத நிலையில், டிசம்பர் 23, 2025 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட மக்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பாரிய உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் ஆழத்தைப் பிரதிபலிப்பதாக வெளிப்படையில் காணப்படுகின்றது.
ஆனால் இதற்கான பின்னணியைப் பார்க்கின்றபோது இந்தியா இலங்கையில் எந்த வொரு தரப்பினரையும் காலூன்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதை அப்பட்ட மாகவே வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆகவே குறித்த விடயத்தில் தீவிரமான கவனம் அவசியமானின்றது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2025 ஆம் ஆண்டு என்பது இலங்கை அரசாங்கம் தனது உள்நாட்டு ஊழல் ஒழிப்பு கெடுபிடிகளுக்கும், சர்வதேச இராஜதந்திர விட்டுக்கொடுப்புகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண முயற்சித்த ஆண்டாகும்.  தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் முன் னேற்றங்கள் ஏற்படுவது போன்று தென்பட்டாலும்  நிலையான அரசியல் தீர்வு மற்றும் நீதிக்கான பயணம் இன்னமும் நீண்டதாகவே உள்ளது.
பொருளாதார மீட்சி மற்றும் பேரிடர் மேலாண்மையில் சர்வதேச ஆதரவுடன் இலங்கை நடைபோட்டாலும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான பெரும் சவால்களாக எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்விதமான சூழலில் புதிய ஆண்டை முகங்கொடுப்பது மிகவும் அவதானத்துக்கு உட்பட்டதாகும்.