இலங்கஒயில் நிலவும் இனங்களுக்கு இடையேயான பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு, தீர்வு தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டிய இலங்கை திருச்சபையின் யாழ். குரு முதல்வர் செல்வன், செம்மணி படுகொலைக்கான நீதி கிடைக்க மக்களாகிய நாமே முழுமையாக முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று (28) மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்த குரு முதல்வர் செல்வன் மேலும் கூறுகையில்,
செம்மணி என்பது இனப்படுகொலை நடத்தப்பட்டதன் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சாட்சியுமாகும். இந்த சாட்சியமே இன்று இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதையும் அதற்கான நீதி வேண்டும் என்பதையும் சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்கிறது.
எனவே அதற்கான வலுப்படுத்தலை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுப்பது அவசியமாகும். அதற்காகவே மெதடிஸ்த திருச்சபை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதேநேரம் கொல்லப்பட்டவர்களின் குருதிகள், தமக்கான நீதியை பெற்றுத்தாருங்கள் என எங்கள் ஒவ்வொருவரிடமும் ஓலமிட்டவண்ணம் இருக்கின்றன. அந்த ஓலங்களுக்கு நாம் நீதியை இலங்கையில், இந்த அரசிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது.
எனவே சர்வதேசத்திடம் இதற்கான நீதியை கோரி நிற்கின்றோம் என்றும் தெரிவித்தார். இப்போராட்டத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா ஜெகதாஸ், அருள்பணி அருளானந்தம் சமுவேல் சுபேந்திரன், வேலன்சுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
