செம்மணியில் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இன்று நிறுத்தப்பட்டு, மீண்டும் ஓகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 42ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (24) நடைபெற்றன.

இன்றைய தினம் ஒரு மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் செம்மணி புதைகுழியில் இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , 479 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டு அவை முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் வைத்தியசாலைகளில் இறந்தவர்களை புதைப்பதில்லை என்று வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளதாகவும் இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை என்றும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இது ஒரு இந்து மயானம். இதில் சட்டரீதியான புதைத்தலும் நடைபெறலாம். சிறுவர்கள் என்றால், அனுமதி எடுத்து அடக்கம் செய்யப்படும்.

ஆனால் இங்கு அதிகமான எலும்புக்கூடுகளை பார்க்கும்போது இது ஒரு குற்றம் நடந்து, சடலங்கள் அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை இலகுவாக புலனாகிறது.

இது சம்பந்தமான அறிக்கைகள் கிடைத்த பின்னர் மேலதிகமாக சொல்லக்கூடியதாக இருக்கும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.