சென்னை விமான நிலையத்தில் ஈழத் தமிழர் அதிரடியாகக் கைது – இரகசிய இடத்தில் விசாரணை

புதுடில்லி செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த ஒருவர் கியூ பிரிவு தனிப்படை போலீசாரால் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். இலங்கைத் தமிழரான அவர் தீவிரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் எனச் சொல்லப்படுகின்றது. அவரை இரகசிய இடத்தில் வைத்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து புதுடில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் நேற்று இரவு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய இந்த பயணிகளை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனா்.

அந்த நேரத்தில் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான கியூ பிரிவு தனிப்படை காவல்துறையினர் 5 போ் கொண்ட குழு, சிறப்பு அனுமதி பெற்று உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதிக்கு வந்தனா். அங்கு டில்லி செல்லவிருந்த பயணிகளை கண்காணித்து அதில், ஆதிமூலம் மணி (45) என்ற பயணியை நிறுத்தி சிறிது நேரம் விசாரணை நடத்தினா்.

பின்னர், அவருடைய பயணத்தை ரத்து செய்தனா். அதோடு ஆதிமூலம் மணியை கைது செய்து, சென்னையில் உள்ள கியூ பிரிவு தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் கியூ பிரிவு காவல்துறை தனிப்படையால் கைது செய்யப்பட ஆதிமூலம் மணி இலங்கையைச் சோ்ந்தவா் என்றும்,இவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும், இவா் பல்வேறு குற்ற செயல்களில் சம்பந்தப்பட்டவா் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு இவரோடு சோ்ந்த குணசேகா் என்பவா் ஏற்கனவே டில்லி சென்றுவிட்டதாகவும் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிகிறது.