சுமைகளை அதிகரிக்கும் ‘க்ளியர் பேக்’

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். அதற்காக எடுக்கப்பட்ட பலவிதமான நடவடிக்கைகளில் ‘க்ளியர் பேக்’ எனப்படும் ஊடுருவிப் பார்க்கக் கூடிய பைகளை மாணவர்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என சில பாடசாலைகளில் கூறியுள்ளார்கள். ஆனால் கல்வியமைச்சு அதனை கட்டாயமாக கொண்டுவர வேண்டும் எனக் கூறவில்லை.

பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதற்காக பெற்றோரை சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது. இந்த நாட்டில் பாரிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட பிள்ளைகள் இந்தளவு அழுத்தத்திற்கு உள்ளாகவில்லை என்கின்றனர் பெற்றோர்.

கண்டி போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி பாலித பண்டார சுபசிங்க இதுபற்றிக் கூறும் போது, அண்மையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்துடன் நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைக்குரியதாக மாறியது. முக்கியமாக பாடசாலைகளுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப பயப்பட்டார்கள். அதனால் பாடசாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிலொன்று ஊடுருவி பார்க்கக் கூடிய புத்தகப் பைகள். இந்தப் பைகள் பற்றி குறிப்பிடப்பட்டவுடன் சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மேலதிக சுமையாகும். மூன்று, நான்கு பிள்ளைகள் உள்ள வீடுகளில் ஒரே நேரத்தில் பைகள் வாங்க போதியளவு பணம் இல்லாமல் இருக்கலாம். அதேபோல் எல்லாக் குடும்பங்களும் ஒரே மாதிரியான பொருளாதார வசதிகளை கொண்டிருப்பதில்லை. இதனால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.

ஊடுருவி பார்க்கக் கூடிய பைகளை கொண்டு வராத மாணவர்கள் தங்களது புத்தகப் பைகளை பாடசாலை கேட்டருகிலேயே விட்டு செல்லவேண்டிய நிலைமை சில பாடசாலைகளில் காணப்பட்டது. இது நகைச்சுவைக்கிடமான செயலாகும். பையில் எதுவும் இல்லை என்றால் ஏன் வெளியே விட்டு செல்ல வேண்டும்.

வெற்றுப் புத்தகப் பைகள் வெடிக்குமா? வெடிகுண்டை பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் புத்தகங்களையும் அதற்காகப் பாவிக்கலாம் அல்லவா? அவ்வாறாயின் புத்தகங்களையும் நுழைவாயிலுக்கு அருகில் விட்டுச் செல்ல வேண்டுமா? அத்துடன் அந்தப் பைகளின் பாவனைக் காலமும் குறைவாகவே உள்ளது. சூரிய கதிர் மற்றும் வேறு சூழல் காரணங்களால் இந்த பைகள் விரைவாக பழுதடைந்து விடும்.

இவ்வாறான நிலைமைகளின் போது பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் இது தொடர்பான நிபுணத்துவம் பெற்றவர்களிடம் கலந்துரையாடி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் ஒளி ஊடுருவி தெரியக் கூடிய பைகளை கொண்டு சென்றாலும் மேலதிக வகுப்புகளுக்கு அவ்வாறான பைகளை கொண்டு செல்வதில்லை. சில இடங்களில் பாடசாலைக்கு வரும் மாணவர்களை விட அதிக எண்ணிக்கையான மாணவர்கள் தனியார் வகுப்புகளில் இருக்கின்றார்கள். அங்கு ஆபத்து இல்லையென உறுதி கூற முடியுமா?