சுமந்திரன் மீது சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

தமிழத் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறியமைக்கு, எம்.ஏ.சுமந்திரனே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று பேசும் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியை நிலைநிறுத்த சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து வந்தார் என்றும், இதனாலேயே கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் பிரிந்து சென்றன என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இவர்கள் போன்றவர்கள் ஐக்கியம் பேசுவது வெறும் வாய்ப்பேச்சளவிலேயே உள்ளது. உண்மையான ஐக்கியத்திற்காக செயற்படவில்லை. மாற்று அணிக்கு வெற்றி கிடைக்காது. மாற்று அணி தேவையில்லை என்று கூறுவதைப் பார்த்தால், மாற்று அணியை நினைத்து அச்சப்படுகின்றார்கள் போல் உள்ளது.

தேவை கருதியே மாற்று அணி உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பு மக்கள் ஆணையைக் கைவிட்டு, அரசாங்கத்தைக் காப்பாற்ற செயற்பட்டு வந்தார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசாங்கத்திற்கு பிரச்சினைக் வந்த போது, அரசாங்கத்தைக் காப்பாற்ற கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டு வந்தனர்.

தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் நோக்கம் இவர்களுக்கு இல்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.