சிவில் பாதுகாப்புப் படையினர்க்கும் ஓய்வூதியம்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் 20வருட சேவையை முடித்த 50 வயதை எட்டிய பெண் உறுப்பினர்களும், 22 வருடகால சேவையை நிறைவு செய்த 50 வயதை எட்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற நிதியமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ கட்டுப்பொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமைக் கட்டிடத்தை நேற்று (04) திறந்து வைத்துப் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2015 தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, 23.04.2015 இற்கு முன்னர் 60 வயதை அடைந்து, விலகிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்கு கொடுப்பனவுகளை வழங்கி கௌரவித்தார்.

சிறுபான்மை இன மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப்பற்றி கலைப்படாத சிறீலங்கா அரசு தனது பாதுகாப்புப்படையினர் மற்றும் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஒவ்வொரு நலனிலும் அக்கறையோடு செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.