சிவகளையில் முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கண்டு பிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளைத் திறந்து அதிலுள்ள பொருட்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

முதுமக்கள் தாழிகளிலுள்ள எலும்புகளை மரபணு சோதனை செய்வதற்காக மதுரை காமராஜர் கல்லூரி ஆய்வுக் குழுவினர் சிவகளை வந்துள்ளனர்.

தூத்துக்குடி, சிவகளையில் தமிழக தொல்லியல்துறை சார்பில் கடந்த மே மாதம் 25ஆம் திகதியிலிருந்து அகழாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. தொல்லியல்துறை இயக்குநர் எம்.பிரபாகரன் தலைமையிலான 10 தொல்லியல் அதிகாரிகள் மற்றும் ஆய்வு மாணவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்த 80 தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

50 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன்,  இங்கு 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளை திறந்து அவற்றின் உள்ளே இருக்கும் பொருட்களை ஆய்வு செய்யும் பணியை தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் எம்.சிவானந்தம் ஆரம்பித்து வைத்தார்.

முதுமக்கள் தாழிகளுக்குள் இருக்கும் மனித எலும்புகளை சேகரித்து மரபணு பரிசோதனை (டி.என்.ஏ) செய்யப்படுகின்றது. முதலில் 2 தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு முதுமக்கள் தாழியில் உள்ள பொருட்களை முழுமையாக ஆய்வு செய்ய 2 தொடக்கம் 3 மாதங்கள் வரை ஆகும் என்று கூறப்படுகின்றது.

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு மூலம் சுமார் மூவாயிரம் ஆண்டு பழைமையான நாகரிகம் இருப்பது தெரியவந்தது. அதற்கு இணையான காலகட்டத்தில் சிவகளையிலும் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதுமக்கள் தாழிக்குள் இருக்கும் மனித எலும்புகளை மரபணு சோதனைக்கு உட்படுத்துவதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படுவதுடன், அதில் இருக்கும் மண் பொருட்கள், இரும்புப் பொருட்கள் போன்றவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஆய்விற்கு அனுப்பவுள்ளதாக அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் பிச்சையப்பன் கூறும் போது, முதுமக்கள் தாழிகளுக்குள் இருக்கும் மனித எச்சங்கள் சேகரிக்கப்பட்டு, பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மரபணு பகுப்பாய்வு செய்யப்படும். இறந்த மனிதர்களின் காது, பல், தாடை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்வதன் மூலம் அந்த மனிதன் வாழ்ந்த காலகட்டம் தெரியவரும். இந்த ஆய்வு முடிவு வருவதற்கு 1 முதல் 2 வருடங்கள் ஆகலாம் என்று கூறினார்.