சிறீலங்காவுக்கு எதிரான புறச்சூழல் ஒன்று மேற்குலகத்தில் ஏற்படுகின்றதா?-ஆர்த்திகன்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா? சிறீலங்கா அரச படையினரும், அதிகாரிகளும் தாம் மேற்கொண்ட போர்க்குற்றத்திற்கான தண்டையை பெறுவார்களா? போன்ற கேள்விகள் தமிழ் மக்களின் மனங்களில் தற்போதும் உள்ளன.

ஆனால் அதனை செயற்படுத்துவதற்கான புறச்சூழல் ஒன்று தோற்றம் பெற்றுள்ளதா அல்லது அதனை எம்மால் ஏற்படுத்த முடியுமா என்பதில் தான் மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கான விடை தங்கியுள்ளது.சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதராங்கள் அனைத்தும் மேற்குலகத்திடம் உண்டு. அவர்கள் அதனை எப்போதோ சேகரித்து விட்டனர்.

அதனை சேகரித்தவர்கள் எல்லோரும் உலகில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகளில் பங்குபற்றிய மிகவும் தரம் வாய்ந்த அதிகாரிகள்.உதாரணமாக சிறீலங்கா படையினரே அதிகளவில் தமிழ் மக்களை படுகொலை செய்திருந்தனர் என்ற உண்மையை 2014 ஆம் ஆண்டு அனைத்துலக குற்றவியல் சான்றுக்கான வேலைத்திட்டம் என்ற அமைப்பு வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையை யூகோஸ்லாவாக்கியவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைக்குத் தலைமை வகித்த திரு ஜேன் ரல்ஸ்ரன்,பிரித்தானியா மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் போராசிரியரும்,சிரோலியோனில் உண்மைகளைக் கண்டறிதலும்,இனநல்லிணக்கப்பாடும் என்ற குழுவில் பணியாற்றியவருமான வில்லியம் செபாஸ், காசாவில் உண்மைகளைக் கண்டறியும் குழுவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற கேணல் டெஜ்மொன்ட் ரவாஸ் மற்றும் சிறீலங்காவில் போர் இடம்பெற்றபோது அங்கு ஐ.நா தூதுவராக பணியாற்றிய கோடன் வைஸ் என்பவர்கள் தயாரித்திருந்தனர்.srilanka execution 987 சிறீலங்காவுக்கு எதிரான புறச்சூழல் ஒன்று மேற்குலகத்தில் ஏற்படுகின்றதா?-ஆர்த்திகன்

இந்த அறிக்கையானது,சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையை மிக அண்மையாக கொண்டுவந்துள்ளதாக அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட பொதுசேவைகள் நீதிமையம் (PIAC) அன்று தெரிவித்திருந்தது.
மிகவும் தரம்வாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைகள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் எல்லாம் அன்றைய சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு எதிரானது என 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த வொசிங்டன் ரைம்ஸ் தெரிவித்திருந்தது.அதேசமயம், பின்லாந்து நாட்டின் முன்னாள் அரச தலைவரும், நோபல் பரிசு பெற்றவரும், கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவருமான தேமி சில்வியா காட்ரைட் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒன்றும் சிறீலங்காவின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

அதாவது இதனைப்போல பல அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டதுடன், ஆதரங்களும் பெருமளவில் சேகரிக்கப்பட்டிருந்தன. இந்த விசாரணைகள் சிறீலங்கா மீது உடனடியாக அழுத்தத்தை கொண்டுவராது விட்டாலும் அங்கு செல்வதற்கான ஒரு நுளைவுப்பாதையை திறக்கும் என முன்னர் கருதப்பட்டது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் என்பது மேற்குலகத்தின் நடவடிக்கைகளை கிடப்பில் போட்டதுடன், தமிழ் மக்களுக்கான நீதியையும் காலம் தாழ்த்தியிருந்தது.ஆனால் தற்போது மீண்டும் காலம் மாற்றம் அடைந்துள்ளது, தமிழ் மக்களை பழிவாங்குவதாக நினைத்த சிங்கள தேசம் தனக்கான அழிவைத் தானே தேடிக்கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் இந்த அழிவில் இருந்து தப்பிப் பிழைப்பார்களா அல்லது பேரழிவைச் சந்திப்பார்களா என்பது தமிழ் மக்களின் அடுத்த கட்டநகர்வில் தான் தங்கியுள்ளது.ஏனெனில் மேற்குலகம் தனது பணியை மீண்டும் ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் தற்போது நடைபெறும் சம்பவங்கள் மூலம் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

பிரித்தானியாவில் நீதிகோரிப் போராடிய தமிழ் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறீலங்கா இராணுவத்தின் லெப். கேணல் தர அதிகாரியும்,பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகயாக கடமையாற்றியவருமான பிரியக்கா பெர்ணன்டோ மீதான குற்றத்தை கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா நீதமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரணில் அரசு பதவியில் இருந்தபோது தீர்ப்புக் கூறத் தயங்கிய நீதிமன்றம் தனது தீர்ப்பை தற்போது தெரிவித்துள்ளது. அதேசமயம் தனது பணியாளர் கடத்தப்பட்டதை ஐரோப்பிய ஒன்றியம் வரை கொண்டுசென்ற சுவிற்சலாந்து அரசு, தற்போது அடுத்தவருடம் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்துக்கும் அதனைக் கொண்டு செல்லவுள்ளது.முன்னர் எத்தனை பேர் கடத்தப்பட்டாலும் மௌனம் காத்தவர்கள் தற்போது பிரச்சனைகளை பெருமெடுப்பில் விசாரணைக்கு இட்டுச் செல்கின்றனர். மேலும், விடுதலைப்புலிகள் மீதான தடையையும் சுவிஸ் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

பொருளாதார மற்றும் பிராந்திய ஆதிக்கமே ஒரு நாட்டினதும், பல இனங்களினதும் தலைவிதியை தீர்மானிக்கின்றது. முன்னாள் சோவியத்து ஒன்றியம் பிளவுபட்டு பல நாடுகள் உருவாகியதும், சேர்பியாவில் இருந்து பிரிந்து சென்ற மென்ரோநீக்ரோ என்ற தேசம் தனிநாடு ஆகியதும் இதன் தாக்கமே.
யூகோஸ்லாவாக்கியா சிதறியதும், அதன் முன்னாள் அதிபர் மிலோசோவிச் இனஅழிப்புக்கான தண்டயைப் பெற்றதும், பல்கன் வளைகுடாவில் ஏற்பட்ட பூகோர அரசியலின் தாக்கமே.

தற்போது நிகழும் நிகழ்வுகளும் எமக்கு சில செய்திகளை கூறத் தலைப்பட்டுள்ளன. அதாவது இந்துசமுத்திரப் பிராந்தியம் மீதான நடவடிக்கையில் மேற்குலகத்தின் போக்கு மாற்றமடைய ஆரம்பித்துள்ளது.சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மீண்டும் குழுக்கள் அமைக்கப்படலாம், அல்லது முன்னைய அறிக்கைகள் மீண்டும் கையில் எடுக்கப்படலாம். 19 02 09 01 76812 445 சிறீலங்காவுக்கு எதிரான புறச்சூழல் ஒன்று மேற்குலகத்தில் ஏற்படுகின்றதா?-ஆர்த்திகன்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்கள் முன்னர் தெரிவித்த கருத்திலும் சில உண்மைகள் மறைந்திருந்தன. அதாவது சிறீலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை தன்னால் தற்போது முடிவுசெய்ய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தர்.ஆனால் அங்கு இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றுள்ளது என்பதை அவர்கள் அறிவிக்கவும் அதிக காலம் எடுக்காது. அதற்கு தேவையாக சூழ்நிலைகளை நாம் உருவாக்க வேண்டும். அதாவது சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் சிதறிப்போயுள்ள சாட்சியங்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.

தற்போது தோன்றியுள்ள சந்தர்ப்பத்தையும், நவநீதம்பிள்ளை அவர்கள் முன்னர் கூறிய கருத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தமிழ் மக்களும் தமது உறவுகளுடன் அல்லது நண்பர்களுடன் பேசுங்கள். இனஅழிப்பில் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி ஐ.நாவில் அல்லது மனித உரிமை அமைப்புக்களிடம் அவர்களின் சாட்சியங்களைப் பதியுங்கள்.
யூகோஸ்லாவாக்கியாவின் முன்னாள் அரச தலைவர் காலம்சென்ற மிலோசொவிக்கின் தலைவிதியைப் போல கோத்தபாயாவின் தலைவிதியை மாற்ற முடியும் என்பதுடன் சிதறுண்ட யூகோஸ்லாவாக்கியாவைப் போல சிறீலங்கவையும் மாற்றமுடியும்.

டிசம்பர் 9 ஆம் நாள் என்பது இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கொள்ளும் நாள் என்பதுடன், மீண்டும் அவ்வாறான குற்றங்கள் உலகில் இடம்பெறாது தடுக்கும் நாளுமாகும். எனவே சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நாம் நினைவில் கொள்வதுடன், தற்போது சத்தமின்றி இடம்றெறுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பையும் தடுத்த நிறுத்த வேண்டும்.