சிறீலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள் – 15 நாடுகளே எதிர்ப்பு

ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்றுவரும் சிறீலங்கா தொடர்பான தீர்மானம் குறித்த விவாதத்தில் சிறீலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள் இருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. தமக்கு எதிராக 15 நாடுகளே உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கவுள்ள நிலையில் அங்கு விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இந்தியா சிறீலங்காவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் முகமாக நடுநிலையை எடுத்துள்ளதுடன், யப்பானும் இந்தியாவை பின்பற்றியுள்ளது. சீனா மற்றும் ரஸ்யா தலைமையிலான ஆசிய மற்றும் அரபு நாடுகள் பெருமளவில் சிறீலங்காவுக்கு ஆதரவுகளை வழங்கியுள்ளன.

இந்த நிலையில் தீர்மானம் தோற்கடிக்கப்படும் சந்தர்ப்பங்களே அதிகம் உள்ளதாக அரசியல் அவதானி ஒருவர் இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு அனைத்துலக நாடுகளுடன் நட்பை பாராட்டி தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ் மக்கள் அப்படியான ஒரு இராஜதந்திர அணுகுமுறையில் தோல்விகண்டதையே இது காட்டுகின்றது.

அண்மையில் கூட தமிழ் கட்சிகள் இணைந்து யாழில் உள்ள தீவுகள் விவகாரம் தொடர்பில் சீனாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டது தமிழ் மக்கள் சந்தித்த மிகப்பெரும் அரசியல் தோல்வி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.