சிறீலங்காவில் வேகமாக பரவும் வைரஸ் – அச்சத்தில் மக்கள்

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கடந்த 3ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், வேயங்கொட வரை ஊரடங்கு சட்டம் விஸ்தரிக்கப்பட்டதுடன், கம்பஹா பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்கள் என அனைத்தும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில பாடசாலைகளில் மாணவர்களை சுயதனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கும், அந்த பகுதிகளிலுள்ள மக்கள் வெளியில் வருவதற்கும் முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தூர இடங்களை நோக்கி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளை கடந்து செல்லும் பஸ்கள், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில், ரயில்கள் நிறுத்துவதும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் ஒன்று கூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநாடுகள், கூட்டங்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், விழாக்கள், ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் அத்தியாவசியமற்ற கூட்டங்கள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த தடையுத்தரவு நாடு பூராகவும் அமுலில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

அத்தோடு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக அழைத்து செல்ல அம்பியூலன்ஸ் வண்டிகளை வீடுகளுக்கு அனுப்புகின்ற போதிலும், சிலர் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாகவும் சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

அதே நேரம், ராஜகிரியவில் ஆடைதொழிற்சாலை ஊழியர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட ஆடை தொழில்சாலையை சேர்ந்த 27 தொழிலாளர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா குறித்து கருத்து தெரிவித்த  ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ச,கொரோனா தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது என்றும்  இது மிகவும் சவாலான தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.