சிறீலங்காவில் மின் உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள அமெரிக்கா ஆர்வம்

சிறீலங்காவில் இயற்கை எரிவாயு மூலம் மின்உற்பத்தியை மேற்கொண்டு அவசர தேவைகளை நிறைவேற்ற அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளதுடன், சிறீலங்கா அரசும் அதனை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நியூ போற்றீஸ் மற்றும் ஜெனரல் எலக்றிக் ஆகிய இரு நிறுவனங்களே இந்த திட்டத்தை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்த திட்டம் தொடர்பான ஆவணங்களை சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ் சிறீலங்கா அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் தன்னை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் இது தொடர்பாக பேசியதாக அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் ஒரு கிலோவற் மின்சாரம் 18 ரூபாய்களுக்கு தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு வழங்கமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த திட்டம் செயற்படுத்தக்கூடியது என்பதால் அதனை அனுமதிக்கப்போவதாக சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

ஆனால் மாசற்ற எரிபொருள்பாவனை என்ற சிறீலங்காவின் திட்டம் இந்த திட்டங்கள் மூலம் தோல்விகண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.