சிறீலங்காவில் இடம்பெற்ற சம்பவத்திற்கு ஜேர்மனியில் தண்டனை- தமிழருக்கு மட்டும் தான் இந்த நீதியா?

சிறீலங்கா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மரணம் தொடர்பில் ஜேர்மன் அரசு மேற்கொண்ட விசாரணைகளில் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜி. நவநீதன் என்ற ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக தாம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக ஜேர்மன் நீதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட நவநீதனுக்கு எதிராக பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தது தொடர்பிலும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

2002 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த அவர் கதிர்காமர் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாகவும், இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் களமுனையில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவியதாகவும் ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.

பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா படைகளுடன் நல்லுறவை வளர்த்துவரும் ஜேர்மன் அரசு போரில் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடிய தமிழ் மக்கள் மீது தனது வெறுப்பைக் காண்பிப்பது தமிழ் மக்களிடம் மேற்குலகத்தின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவித்தள்ளனர்.