சிறீலங்காவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: அலன் கீனன்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முஸ்லீம் அரசியல்வாதிகளை பலவந்தமாக பதவிகளில் இருந்து வெளியேற்றிய நடவடிக்கை மிகவும் வருத்தமான செயல் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் திட்டமிடல் பணிப்பாளர் அலன் கீனன் அல்ஜசீரா ஊடகத்திற்கு நேற்று (03) தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரசியலில் செல்வாக்குள்ள பௌத்த துறவிகள் தாம் பெரும்பான்மை மக்களுக்காக பேசுவதாக கூறிக்கொண்டு முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தான் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் எல்லோரும் பதவி விலகியுள்ளனர்.

இந்த வழிமுறை சிறீலங்காவுக்கு நல்லது அல்ல, ஏனெனில் சிறுபான்மை இனங்கள் மீது மீண்டும் மீண்டும் அங்கு வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறீலங்காவில் இடம்பெறும் அரசியல் வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.