சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கிய கப்பல்

சிறிலங்கா கடற்படைக்கு சீன அரசாங்கம் வழங்கிய பெரிய கப்பல் இன்று (08.07) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. P 625 என்னும் பெயர் கொண்ட இந்தக் கப்பலை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 5ஆம் திகதி சீனாவின் சங்ஹாயில் உள்ள கடற்படைப் பிரிவில் இடம்பெற்றது.

சிறிலங்கா கடற்படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் நிசாந்த உலுகே தென்னக்கோனின் தலைமையிலான குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.

1994இல் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பலின் நீளம் 112 மீற்றர் என்பதுடன், அகலம் 12.4 மீற்றர் என கடற்படைத் தரப்பினர் கூறினர். 2300 தொன்கள் எடை கொண்ட இந்தக் கப்பலில்  18 அதிகாரிகள் உட்பட 110 பேரைக் கொண்ட பணியாளர்கள் கடமையில் ஈடுபட முடியும்.

மேலும், சிறிலங்கா கடற்படைக் கப்பல் குழுவில் இணைந்து கொண்ட பின்னர் சிறிலங்காவிற்கு உட்பட்ட ஆழ்கடல் வலயத்திற்குள் தேடுதல், மீட்டெடுத்தல் போன்ற பணிகள், கடல் வளங்களை பாதுகாத்தல், கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல் மற்றும் வளங்களுக்கு உதவிகளை வழங்குவது ஆகியவற்றிற்காக இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.