சிறிலங்கா உல்லாசப் பயணத்துறை 51 மில்லியன் ரூபாயை இழந்துள்ளது – அசோக் அபேசிங்க

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டிற்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் உல்லாசப் பயணத்துறை 51 மில்லியன் ரூபாயை இழக்க நேரிட்டுள்ளதெனப் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக் அபேசிங்க (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கைக்குத் தினமும் 4,500 க்கும் மேற்பட்ட உல்லாசப்பிரயாணிகள் வருவதாகவும் மேற்படி குண்டுத் தாக்குதலையடுத்து உல்லாசப் பிரயாணிகளின் வருகை வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், கடந்த வருடத்தில் 23 இலட்சம் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இவ்வருடத்தில் வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா, மத்த​ள, இரத்மலானை, மட்டக்களப்பு,பலாலி, சீகிரிய உட்பட நாட்டில் 15 சிவில் விமான நிலையங்கள் உள்ளன. மத்தள விமான நிலையத்திற்குத் தற்போது விமானம் வராவிட்டாலும் இன்னும் சில மாதங்களில் அந்த விமான நிலையத்தை இலாபமீட்டும் விமான நிலையமாக நாம் மாற்றுவோம்.

கடந்த அரசாங்கம் 250 மில்லியன் டொலர் செலவில் மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்த போதும் அங்கு விமானங்கள் வராத நிலையில், பெரும் நஷ்டத்தை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. இந்த வருடத்தில் அந்த விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு இலாபமீட்டும் விமான நிலையமாக மாற்றப்படும்.