சிறிலங்கா அரசுக்கு 3 மாதகால அவகாசம்;தவறினால் போராட்டம் – மாவை

ஐக்கிய இலங்கைக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் வழங்கவேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மீண்டும் வலியுறுத்தினார்.

மூன்று மாதகாலத்துக்குள் அரசாங்கம் நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும். தவறினால் ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா இங்கு தலைமையுரை ஆற்றும்போதே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

தமிழின அடையாளங்களை அழிக்கும் வகையிலான இனக்குடிப்பரம்பல் நிறுத்தப்படவேண்டும். காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் உண்மையைக் கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி நீண்டகாலம் சிறையிலுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

பௌத்த அடிப்படைவாதிகள் இந்து மக்கள் கோவில்களில் இந்து கலாசார மையங்கள் புனித பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு செய்து புத்தர் சிலைகளையும் விக்கிரகங்களையும் கட்டிவரும் அத்துமீறல் அடாவடித்தனங்களுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் பிரசாரம் செய்துவருகின்றனர். இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளில் இணங்கிய விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பில் சர்வதேச சமூகம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இம்மாநாட்டிலிருந்து எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அல்லது ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தீர்மானிக்க வேண்டும்” என்றும் மாவை சேனாதிராஜா தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அனைத்து சக்திகளையும் அணிதிரட்டி ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்தவேண்டுமென்ற பொறுப்பை வரலாற்றுக் கடமையை தெரிவு செய்து கொண்டிருக்கின்றேன். எல்லோரும் தமிழ்த் தேசியத்தின் தமிழ், – முஸ்லிம், தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும் ஒன்றுபட்டுழைக்க திடசங்கற்பம் பூணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.