சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்  முன்வைத்துள்ளார்.
சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் விவாதிக்கப்பட்டு, அரசவைப் பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 16-11-2019 அன்று இடம்பெறுகின்ற தேர்தல் சிறிலங்கா அரசின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக அமைவதால் சிறிலங்கா அரசு குறித்து எமது பார்வையினை முதலில் தெளிவுபடுத்துவதும் அவசியமாக இருக்கிறது.

சிறிலங்கா அரசியற்கட்டமைப்பு சிங்களப் பௌத்த பேரினவாதக் கட்டமைப்பாக இறுகிப் போயிருக்கும் காரணத்தால், இக் கட்டமைப்பின் கீழ் தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வையும் கண்டு விட முடியாது என்பதே சிறிலங்கா அரசு தொடர்பாக எமது நிலைப்பாடு ஆகும்.

தமிழீழ மக்கள் தமது தாயகத்தில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், கௌரவமாகவும், இனஅழிப்புக்கு உட்படாமல் வாழவேண்டுமாயின் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசொன்றினை அமைப்பதனைத் தவிர வேறுவழியேதுமில்லை என்பதனை நாம் உறுதியாக நம்புகிறோம். இதுவே வரலாறு எமக்குக் காட்டி நிற்கும் வழியாகவும் இருக்கிறது. இதுவே மாவீரர்களுக்கும், சிங்களத்தின் இனவழிப்பில் கொல்லப்பட்ட நமது மக்களுக்கும் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச நீதியாகவும் இருக்கும்.

2009 ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் ஊடாக தமிழீழ மண்ணை சிங்களம் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டது. இவ் ஆக்கிரமிப்பு நிலைக்குள் நம்மை வைத்துக் கொண்டு தமிழீழ மண்ணையும் தமிழ் மக்களையும் கபளீகரம் செய்வதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசு பகீரத முயற்சி செய்து வருகிறது. இவ் இனக்கபளீகரம் சிறிலங்கா அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. இதனாற்தான்; சிறிலங்கா அரசினை ஆட்சி செய்யும் எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எந்தக் கட்சியினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தமிழின அழிப்பைத் தமது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறார்கள். இங்கு தமிழின அழிப்பு என்பதனை உயிர்க்கொலைகளாக மட்டும் சுருக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய தகமைகளையெல்லாம் அழித்து, அவர்களை உதிரி மக்களாகச் சுருக்கி சிங்களத்தின் மேலாண்மைக்கு உட்படுத்தல் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

தமது இந்த தமிழின அழிப்பு இலக்கை அடைந்து கொள்வதற்கு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை நீண்டகாலத் திட்டத்துடன் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மிகவும் மனவருத்தம் தரக்கூடிய விடயமாக இருப்பது என்னவென்றால் தமிழர் தேசம் என்ற மரத்தை வெட்டுவதற்கு தமிழர்களே கோடரிக்காம்பாக சிறிலங்கா அரசால் பயன்படுத்துப் படுவதுதான். சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புத் திட்டத்துக்கு என்ன காரணத்துக்காகவேனும் முண்டு கொடுக்கும் தமிழர்கள் பெரும் வரலாற்றுப்பழியைச் சுமந்து நிற்கிறார்கள். சிறிலங்கா அரசின் அடிவருடித் தமிழர்;கள் மட்டுமல்ல தமிழர் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களும் சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழின அழிப்புக்குத் துணைபோய்க் கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது.

இக் குறிப்புகளோடு சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களைப் பதிவு செய்கிறோம் :

1. தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட சிறிலங்கா அரசியல்யாப்பின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் தமிழ் மக்கள் கொள்கை அடிப்படையில் பங்கெடுக்க முடியாது. இத் தேர்தல்களில் எந்தவகைப் பங்குறபற்றலும் கொள்கையினை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய உத்தி அடிப்படையில் மட்டுமே அமைய முடியும்.

2. சிறிலங்கா அதிபர் தேர்தல் தமிழர் தாயகப்பகுதியின் மக்கள் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிப்பதில்லை. இத் தேர்தல்களில் தமிழின அழிப்புக் குற்றவாளிகளுக்கு தமது வாக்குகளை அளிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்களை தமிழர் தலைவர்கள் தள்ளியுள்ளனர். 2010 ஆம் ஆண்டிலும் 2015 ஆண்டிலும் ஜனாதிபதித் தேர்தலில்
அளிக்கப்பட்ட தமிழர் வாக்குகள் தமிழ் மக்களுக்கு உரிய பயனை அளிக்கவில்லை.

3. அதிபர் தேர்தலை உத்தி சார்ந்து கையாள்தில் கடந்த காலங்களைப் போல இத் தடவையும் தமிழ் தரப்பு வெற்றியடையவில்லை என்பதே எமது அவதானிப்பு. இத் தேர்தலில் பங்குபற்றும்போது தமிழர் தேசத்தின் பலத்தை வளர்த்தெடுத்தல், அனைத்துலக அரசுகளுடனான உறவுகளில் சிங்களத் தரப்புக்கு இணையான ஒரு தரப்பாக தம்மை நிலைநிறுத்துதல் போன்றவை குறைந்தபட்ச உத்திகளாகக் கடைப்பிடிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இவையேதும் நடைபெறவில்லை.

4. இந்த தேர்தலை எவ்வாறு தமிழர் தரப்பு கையாளவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கின்ற பணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக சமூகத்தினை நாம் பாராட்டுகின்றோம். அதில் எட்டப்பட்ட 13 அம்ச கோரிக்கை மட்டமல்ல எத்தனை கோரிக்கைகளை முன்வைத்தாலும், சிங்கள ஆட்சியாளர்களால் அதனை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் வெளி, சிறிலங்காவில் அதற்கு இல்லை என்பதே தெளிவு. இனநாயகமயப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் அரசியற்கட்டமைப்பு இதற்கு காரணமாக இருக்கின்றது.

எம்மைப் பொறுத்தவரை பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் மேற்கோள்ளபட்ட 5 கட்சிகளின் 13 அம்சத்திட்டக் கோரிக்கை முன்னெடுப்பும் உத்திரீதியாக சரியாக வடிவமைக்கப்படவில்லை என்றே கருதுகிறோம். இதனை எந்த சிங்கள பேரினவாதத்தலைவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை உய்த்துணர்ந்து கொள்வது கடினமானதொன்றல்ல. இதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. சிங்களத் தலைவர்கள் இக் கோரிக்கைகளை உதாசீனம் செய்யும் போது தமிழர் தேசிய பலத்தை நிலைநிறுத்துவதற்குரிய அடுத்த கட்ட நடவடிக்கைத் திட்டம் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது போனமை தமிழர் தரப்பின் அரசியல் வறுமையின் வெளிப்பாடகவே தெரிகிறது.

5. தமிழ்த் தேசியம் சாரந்த அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் ஒரு பொது வேடபாளரை தமிழ் மக்களின் கொள்கைசார் நிலைப்பாடுகளோடு அதிபர் வேட்பாளராக தமிழர் தரப்பு நிறுத்தியிருக்குமானால் தமிழ் மக்களை ஒரு அரசியற்சக்தியாகப் பொருட்படுத்தாத சிங்களத் தலைவர்களையும் அனைத்துலக அரசுகளையும் எம் மீது கவனத்தைத் திருப்ப வைத்திருக்க முடியும். தமிழ் மக்களை தாம் நினைத்தவாறெல்லாம் பயன் படுத்த முடியாதென்பதனை நிறுவியிருக்க முடியும். இத்தகையதொரு வாய்ப்பும் தவற விடப்பட்டிருக்கிறது.

6. சிலர் பரப்புரை செய்வது போல அதிபர் தேர்தலில் ஆபத்து குறைந்த பேயைத் தேர்ந்தெடுத்தல் என்பது கொள்கை சார் உத்தியாக இருக்க முடியாது. ‘பேய்’ என அடையாளம் கண்ட பின்னர் எந்தப் பேய்க்கும் வாக்களிப்பது மனிதர்கள் மேற் கொள்ளும் முடிவாக இருக்க மாட்டாது. எந்தப் ‘பேய்க்கு’ வாக்களித்தாலும் அது தமிழின அழிப்பைத் தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் என்பதனை நாம் மறந்து போகக் கூடாது.

7. தாயகத்தில் உள்ள மக்களுக்கு இக் கருத்துகளுக்கு மேலதிகமாக அதிபர் தேர்தல் குறித்து எந்த வழிகாட்டுதலையும் செய்வதற்கு நாம் விரும்பவில்லை.

8. அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளப் போகும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றினை எதிர் கொள்வதற்கான செயற்பாடுகளில் நாம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்ற வேண்டுதலை அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் இத் தருணத்தில் முன்வைக்கிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.