சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் -மூதூர் பிரதேச சபை

இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மக்களே அதிகமாக வாழ்வதால் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே ஏனைய மொழிகளை பயன்படுத்த வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை அரசாங்கத்தினால் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களில் அம்மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

எனினும் சில உற்பத்திப் பொருட்களில் தமிழ் மொழியானது புறக்கணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக நியூசிலாந்தை தலைமையகமாகக் கொண்டு இலங்கையிலும் கிளையைக் கொண்டு இயங்கிவரும் பொன்டெரா நிறுவன உற்பத்திப் பொருட்கள் சிலவற்றில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் முன்னுரிமைப் படுத்தப்பட்டு தழிழ் மொழியானது புறக்கணிக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையானது இலங்கையில் மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் சங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

குறிப்பாக இலங்கையில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் தமிழ் பேசும் மக்களையும் பொன்டெரா நிறுவனம் புறக்கணித்துள்ளதாக மக்கள் உணர்கின்றார்கள். இது தற்போது பேசும் பொருளாகவும் உள்ளது. இது தொடர்பாக பொன்டெரா நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எழுத்து மூலமான கோரிக்கையினை தாம் அனுப்பியிருப்பதாகவும், இது தொடப்பாக சாதகமான பதிலை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியும்” என்றார்