சாந்தபுரம் கிராமத்தை முல்லைத்தீவுடன் இணைக்க திட்டம் – மக்கள் எதிர்ப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள சாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த அதிகாரிகளை, பதிவுகள் மேற்கொள்ள விடாது எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கடந்த வாரம் ஓட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகளால் சாந்தபுரம் கிராமத்தின் பல பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இன்று காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள் சாந்தபுரம் கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்திற்கு வருகை தந்து, மக்களையும் அழைத்திருந்தனர் .

இதன்போது மக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்திருத்திருந்ததோடு கிராமம் உருவாக்கப்பட்டு இன்று வரை கல்வி, சுகாதாரம் மற்றும் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், பிரதேச சபை என அனைத்து நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்துடன் இருந்தது என மக்கள் கூறுகின்றனர்.

மேலும், கடந்த காலத்தில் காணி அனுமதி பத்திரம் கூட கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டிருந்தது. மேலும் சாந்த புர கிராமத்திற்கு அருகில் கிளிநொச்சி மாவட்டமே உள்ளதென்றும்,ஆனால் தற்போது காணிகளை முல்லைத்தீவு- ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்குள் கொண்டு செல்வது பொருத்தமற்றது எனவும் மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினர் கருத்து தெரிவித்தபோது, “சாந்தபுரம் கிராமத்தின் நில அளவை வரைபடத்தின்படி அது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகிறது.

ஆனால் மக்கள் அனைவரும் தங்களது நிர்வாக நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்டத்துடன் வைத்திருகின்றார்கள். எனவே இதன்படி நாம் காணி ஆவணங்களை மாத்திரமே வழங்குவோம். ஏனைய நடவடிக்கைள் வழமை போன்று கிளிநொச்சி மாவட்டத்துடனே இருக்கும்” என்றனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கூறுகையில்  “சாந்தபுரம் கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள் வருகின்றமையால் காணி ஆவணங்களை மாத்திரமே முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய நடவடிக்கைள் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்துடன் காணப்படும். ஆனாலும் இது நிர்வாக நடவடிக்கைகளில் குழப்பத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம். எனவே வருங்காலத்தில் எல்லை மீள்நிர்ணய குழுவுடன் பேசி முழுமையாக சாந்தபுரத்தை கிளிநொச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.